எழில்மிகு கொங்கு மண்டலம்
கடினமான உழைப்பில் இருந்து ஒரு சிறிய ஓய்வு வேண்டும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். செல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு எங்காவது ஒருநாள் எந்த சிந்தனையும் இல்லாமல் மகிழ்வுடன் இருக்க வேண்டும்.
உழைத்து உழைத்து களைத்து திடீரெண்டு ஒருநாள் இப்படி நம் எல்லோருக்கும் தோன்றும். நகர மயமாக்கலின் தாக்கம் எங்கு திரும்பினாலும் புகை மாயம், வாகனங்களின் ஓசை, போக்குவரத்து நெரிசல் என்று நகரில் சுற்றி வரும் போது கூட நமக்கு ஒரு நிம்மதி கிடைப்பதில்லை. வியாபாரம் நம்முள் ஏற்றி விட்ட ரத்த அழுத்தம் நகரில் அமைதியாக இருக்கலாம் என்றால் அதற்கு வாய்ப்பில்லாமல் செய்து விடுகிறது. இன்று நவீன மயமாகி விட்ட ஷாப்பிங் மால்களுக்கு சென்றாலும் தியேட்டர்களுக்கு போனாலும் மனதளவில் நிறைவு என்பது இல்லாமலேயே இருக்கிறது.
தமிழகத்தில் கொங்கு மண்டலம் என்று அழைக்கபடும் கோவையும் அதனை சுற்றிலும் உல்லாசமாக பொழுதை போக்க மன அழுத்தத்தை குறைக்க இயற்கையோடு ஒன்றி சில நாட்கள் வாழ மனித சஞ்சாரம் குறைந்த பல அருமையான இடங்கள் இருக்கின்றன. காலை முதல் வாகன சத்தமில்லாமல் அருவிகளின் ஓசை பறவைகளின் ஒலி என்று அமைதி பூங்காக்கள் நிறைய இருக்கின்றன. உங்களுக்காக ஒரு சில இடங்களை இப்போது பார்க்கலாம்.
கோவை குற்றாலம்

மேற்கு தொடர்ச்சி மலையின் எழில்மிகு வனப்புக்கு கூடுதல் சிறப்பு சேர்க்க ஒரு சிற்றருவியுடன் சிறுவாணியின் கிளை நதி ஒன்று ஓடி வருகிறது. இங்கே ஒரு நாள் காலை முதல் மாலை வரை செலவிட அருமையான இடம். கோவியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் இருக்கிறது. இங்கே செல்ல கோவை காந்திபுரத்தில் இருந்து பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
![]() |
| வனத்துறையால் அமைக்க பட்டுள்ள தொங்கும் பாலம் |
மலை அடிவாரம் சென்று செர்ந்துவிட்டால் அங்கிருந்து வன இலாக்கா அவர்களின் வாகனத்தில் நம்மை அழைத்து செல்கிறார்கள். முன்பெல்லாம் அருவி இருக்கும் இடம் வரை நடந்து செல்லவும் அவரவர்கள் கொண்டுவரும் வாகனத்தில் செல்லவும் அனுமதிக்க பட்டிருந்தனர். சில விசமிகளின் பொறுப்பற்ற செயல்களால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படவே இப்போதெல்லாம் வன இலாக்காவின் கண்காணிப்பில் மட்டுமே செல்ல முடிகிறது.
![]() |
| எழில் மிகு கோவை குற்றால அருவி மற்றும் குளம் |
காட்டின் நடுவே ஒரு அருமையான நீர்வீழ்ச்சி அதன் கீழ் புறம் குளிப்பதற்கு அருமையான குளம் என்று இயற்கை வனப்புடன் இங்கே இருக்கிறது. வன விலங்குகளிடம் இருந்து நம்ம பாதுகாத்து கொள்ள தொங்கும் பாலம் ஒன்றையும் வன இலாகா அமைத்துள்ளது. அருமையான சுற்றுலா தலம். ஒருநாள் சுற்றுலா சென்று வரலாம்.
எழில் கொஞ்சும் பொள்ளாச்சி
புல்லாட்சி (நெல்லின் ஆட்சி) என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டு இருக்க வேண்டும் இது ஒரு கோவையின் துணை நகரம் (Satlite Town). கோவையில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சிறு நகரகம் ஒரு வயலும் வயல் சார்ந்த இடம் என்று சொல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் இந்த நகரத்தை செழிப்பாக்கி விட்டு செல்கிறது. உலகுக்கு தென்னை பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவின் முன்னணி நகரமாக பொள்ளாச்சி திகழ்கிறது.
| ரெசார்ட்டுகளின் அருகில் ஓடும் அம்பரா ஆறு |
இங்கே இருக்கும் ரிவர் சைட் ரெசார்டுகள் வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை நாட்களை இன்பமாக செலவிட ஏற்ற அருமையான இடங்களாக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் ஆறுகளின் ஓரம் அமைந்துள்ள ரெசார்டுகளில் தங்கவும் பொழுது போக்கவும் எந்த இடையூறுகளும் இல்லாமல் இருக்கிறது. பகல் நேரங்களில் இயற்கையான சூழலில் ஆறுகளில் குளிக்கலாம், மற்ற நேரங்களில் தங்கும் இடத்தில் குளிக்க நீச்சல் குளங்களும் அமைத்திருக்கிறார்கள். நமக்கு என்ன உணவு வேண்டுமோ அந்த உணவை அருமையாக சமைத்து தருகிறார்கள். இங்கே இரண்டு மூன்று நாட்கள் வரை நேரம் போவதே தெரியாது. குடும்பத்துடன் செல்ல ஏற்றது.
| வாடிக்கையாளர்களை கவர அழகிய செயற்கை குளம் |
டாப் ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு
கோவையில் இருந்து 78 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது டாப்ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வனம். பரம்பிக்குளம் கேரளா வன துறையாலும் டாப்ஸ்லிப் தமிழக வன துறையாலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பரம்பிகுளத்தில் அட்வான்ஸ் புக்கிங் செய்து கொள்வது நலம். எந்த முன் முயற்சியும் இல்லாமல் நேராக சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும். வனத்திற்குள் விடவே மாட்டார்கள். ரிசர்வேசன் செய்து விட்டு சென்றால் மதியம் அங்கே செல்வது போன்று திட்டமிட்டு சென்றால் இரவு காட்டில் தங்குவது போன்றதோர் அருமையான அனுபவம் நமக்கு கிடைக்கும்.
மறுநாள் காலை டூர் அழைத்து செல்வார்கள். அடர்ந்த வனத்திற்குள் மரங்கள் வன விலங்குகள் என்று கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. நல்ல கேமரா வைத்துகொள்ள வேண்டும். காண கிடைக்காத காட்சிகளை படம் எடுத்து வாழ்நாள் பொக்கிசமாக வைத்து பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
திரும்பி வரும் போது ஒரு அரைநாள் டாப்ஸ்லிப்பில் செலவிட்டால் போதுமானதாக இருக்கும். இங்கும் வனபகுதிக்குள் சுற்றுலா அழைத்து செல்கிறார்கள். யானை சவாரி முன் பதிவு செய்து சென்றால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். மாலை வேளைகளில் கும்கி யானைகளுக்கு உணவு ஊட்டுவது பார்க்க கண்கொள்ளா காட்சி.
| டாப்ஸ்லிப்பில் யானைகள் முகாம் |
| யானை சவாரிக்கு செல்லும் கும்கி |
| வனத்தில் சுதந்திரமாக சுற்றி திரியும் மயில் |
அமைதி பள்ளத்தாக்கு (Sailent Valley)
கோவையில் இருந்து 90 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கிறது இந்த அமைதி பள்ளத்தாக்கு. கோவை தடாகம் சாலை வழியாக ஆனைகட்டியை தாண்டி செல்ல வேண்டும். கேரளா மாநிலத்துக்கு சொந்தமான வனம். இங்கேயும் முன் பதிவு இருக்கிறது. சைலன்ட் வாலி என்று நெட்டில் தேடினால் தொடர்பு எண் கிடைக்கிறது. காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கிறார்கள். வனத்துக்குள் செல்ல தனியார் ஜீப்புகளை வாடகைக்கு எடுத்து கொள்ள வேண்டும். ஆறு பேர் பயணிக்க கூடிய ஒரு ஜீப் 1600 ரூபாய்க்கு கிடைக்கிறது. உள்ளே சென்றால் அருமையான வனம். ஒரு அழகிய ஆறு ஒன்று ஓடுகிறது, வனத்தை கண்காணிக்க ஒரு பெரிய வாட்ச் டவர் அமைத்துள்ளனர். ஆற்றில் குளிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் நிறைய அட்டைகள் இங்கே இருக்கிறது. அவை கடிப்பது நமக்கு வலிப்பதே இல்லை. கையில் புகையிலை அல்லது மூக்கு பொடி வைத்து கொள்ள வேண்டும். அட்டை கடிக்கும் போது அதன் மீது தூவினால் விட்டு விடும். ரத்தம் வெளியேறுவதை தடுக்க பேண்ட் எய்ட் வைத்து கொள்வது அவசியம்.
கொடிவேரி அணை மாற்றும் நீர்வீழ்ச்சி
![]() |
| அணையின் பனோரமிக் வியு |
கோவையில் இருந்து சத்திய மங்கலம் அருகில் இந்த நீர்வீழ்ச்சி இருக்கிறது. கோவையில் இருந்து 75 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் இருந்து வருபவர்கள் ஈரோட்டில் இருந்து 63 கிலோ மீட்டர் தூரமே இருக்கிறது. கோவை வந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
![]() |
| அருவியில் நீர் விழும் அழகிய காட்சி |
காலை நேரத்தில் சென்று விட்டால் அருவியில் குளித்து விட்டு அணையில் இருந்து பிடித்த மீன் பிடித்து அருமையாக சமைத்து தருகிறார்கள். மதிய உணவு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கிராமத்து சமையல் மீன் குழம்பு மீன் வறுவல் என்று சாப்பிட கலக்கலாக இருக்கும். பிடித்தவுடன் சமைத்து தருவதால் மீன் சுவை நீண்ட நாட்களுக்கு மனதில் நிறைவாக இருக்கும்.
![]() |
| பரிசலில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் காட்சி |
பரிசல் பயணம் செல்ல மிக குறைந்த கட்டணமே வசூலிக்கின்றனர். பரிசலில் பயணம் செய்ய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது மட்டுமே ஒரு குறைபாடு.
அருவியின் அருகில் இருக்கும் பூங்காவில் இளைப்பாற அருமையான இடம் இருக்கிறது. ஒருநாள் சுற்றுலாவிற்கு அருமையான இடம்.
நான் மேலே சொன்ன இடங்கள் இயற்கை ஆர்வலர்களுக்கான இடங்கள். இது போக ஆன்மீகத்தில் திளைப்பவர்களுக்கும் கொங்கு மண்டலத்தில் ஏராளமான கோவில்கள், மதம் சார்ந்த யோகா மையங்கள், காருண்யா பல்கலை கழகத்தில் இருக்கும் பெதேஸ்தா மற்றும் இஸ்லாமிய மசூதிகளும் வழிபாட்டு தளங்களும் இங்கே ஏராளம்.









No comments:
Post a Comment