குதிரை முக் - ஒரு மழைக்கால பயணம்
வாழும் போதே சொர்கத்தை பார்க்க வேண்டுமென்றால் குதிரை முக் செல்ல வேண்டும். சொர்கம் எப்படி இருக்கும் என்று தெரியாது அப்படி ஒன்று இருக்கா இல்லையா என்பதும் தெரியாது ஆனால் குதிரை முக் மலை முழுவதும் சொர்கமாகத்தான் காட்சியளிக்கிறது. குதிரை முகம் என்று தமிழில் நாம் அழைப்பதை கன்னடத்தில் குதிரை முகா என்று அழைக்கிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலையில் சிக்கமகளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மலை சிகரத்தின் ஒரு பகுதி குதிரை முகம் போன்ற அமைப்பில் இருப்பதால் குதிரை முகா என்று கன்னடத்திலும் ஆங்கிலத்தில் KUDHRAMUKH என்றும் அழைக்கிறார்கள்.

ஒரு குடும்பத்தில் நான்கு பேர் ஓரிடம் செல்வதென்றாலே எவ்வளவோ திட்டமிடல் வேண்டியதிருக்கும் இந்த நாளில் ஒரு மிகப்பெரிய குழுவை அழைத்து செல்வது என்றால் அதற்கு எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதை எங்கள் குழுவின் கேப்டன் ராஜீவிடம் தான் பார்த்து தெரிந்து கொண்டேன்.
மூன்று மாதம் முன்பே பயண தேதி அறிவித்து பயணத்திற்கான டிக்கட்டுகள் முன்பதிவு செய்வது வரை அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கட் மேட்ச் நடப்பது போன்று எந்த விதமான இடையூறும் இல்லாமல் ஒவ்வொரு ட்ரெக்கிங் பயணத்தையும் அசாத்திய திறமையோடு முன் நடத்தி செல்லவும் தனி திறமை வேண்டும். மனிதர் சங்கர் படம் போன்று ஸ்டோரி போர்ட் எழுதி வைத்து கொள்ளவாரா என்று தெரியவில்லை. எல்லாம் சொல்லி வைத்தது போன்று அவ்வளவு கனகச்சிதமாக நடக்கும்.
- குதிரைமுக் தேசிய பூங்கா அன்புடன் அழைக்கிறது
தென் இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பமாகும் ஜூன் மாதம் ஏற்பாடு செய்யபட்டிருந்ததால் இந்த ட்ரெக்கிங்குக்கு மான்சூன் ட்ரேக் என்று பெயர் சூட்டி இருந்தார் எங்கள் குழுவின் தலைவர் ராஜீவ்.
ஜூன் மாதம் 24 ஆம் நாள் இந்த மான்சூன் ட்ரேக்குக்கு பதிவு செய்தவர்கள் எல்லோரும் அவரவர் பகுதியில் இருந்து பயணப்பட்டு ஜூன் 25 ஆம் நாள் அதிகாலை 4.30 மணியளவில் மங்களூர் ரயில் நிலையத்தில் ஒன்று கூடினோம்.
- சாலைகளே இல்லாத இடத்திற்கும் ஏற்ற வாகனம்
பரஸ்பரம் காலை வணக்கத்தை பரிமாறி கொண்ட பின் ரயில் நிலையத்தை விட்டு வெளியே தயாராக காத்திருந்த டெம்போ டிராவலர்கள் இரண்டும் எங்களை சுமந்து கொண்டு குதிரைமுக் நோக்கி பயணமானது.
இந்த பயணத்தில் எனது பால்ய நண்பர் அந்தோணிசாமி சேர்ந்து கொள்ள பயணம் கூடுதல் சுகமானது.
- நண்பர் அந்தோணி சாமியுடன்
மழைகாலத்தில் தண்ணீரை சேமித்து வைத்துகொள்ளும் புற்கள் அதிக அளவில் இருப்பதால் ஆயிரகணக்கான வற்றாத அருவிகள் எங்கு பார்த்தாலும் இந்த மலைகளில் வழிந்தோடி கொண்டே இருக்கின்றன. இந்த மலையில் இருந்து தான் துங்கா, பத்ரா, நேத்ராவதி போன்ற வற்றாத ஜீவநதிகள் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களை செழிப்பாக்குகின்றன.
- குடைக்குள் மழை எங்கள் கைடு
இந்த மலை முழுவதும் ஆங்காங்கே காட்டெருமைகளின் சாணங்களும் புலிகள், சிறுத்தைகள் வேட்டையாடிவிட்டு சென்ற மிச்சங்களும் கிடக்கின்றன. சிங்கவால் குரங்குகளின் தாய் வீடு இந்த குதிரை முக் தேசிய பூங்கா.
காலை புத்துணர்வு பெற்று எங்களுக்காக சூடாக புட்டு போன்று ஒரு உணவை பரிமாறினார்கள். நல்ல சுவையாக இருந்தது. மதிய உணவை அவர்கள் பொட்டலமாக செய்து கொடுக்க பெற்று கொண்டு நடை பயணத்தை துவங்கினோம்.
- இன்பமே உந்தன் பேர் இயற்கையோ
சிறிது நேரத்திலேயே பாரஸ்ட் செக் போஸ்ட் வந்து விடவும் எங்களுக்கான பதிவு வேலைகளையும் உள்ளே செல்ல லோக்கல் கைடு ஒருவரையும் அழைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.
- கேப்டன் ராஜீவ்
திரும்பும் இடமெல்லாம் இயற்கை பேரெழில் கண்ணுக்கு முழுவதும் விருந்து. எங்களை கண்டவுடன் அட்டை பூச்சிகள் உற்சாகத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டன. மரம் செடி கொடிகள் எல்லாவற்றிலும் இருந்து திடீரென்று சிலிர்த்து எழ ஆரம்பித்தன. காலை கிளம்பும் போதே வேப்பெண்ணை, மூக்குபொடி என்று தேய்த்து கொண்டு கிளம்பினாலும் விடுவதாய் இல்லை. எப்படியேனும் காலில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து தக்காளி சட்டினி வழிந்து கொண்டே தான் இருக்கிறது. ஹா ஹா அதுவும் ஒரு சுகமான அனுபவம் தான் அடுத்தவர்களை கடிப்பதை பார்க்கும் வரை.
- நண்பர் கவியரசு
கடிக்கும் முன் அட்டைகள் எல்லாம் வலி நிவாரணிகளை முன்பே நம் உடலுக்குள் செலுத்தி விடுவதால் கடிப்பதும் தெரிவதில்லை வலிப்பதும் தெரிவதில்லை.
- அழகான நடைபாதை
என்னுடன் வந்த நண்பர் அந்தோணி விளையாட்டாக நான் இப்போ இரண்டு பேருக்கு ரத்தம் தானம் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
எங்கள் குழுவின் இளைய தளபதி குப்புசாமி சாரின் மகன் சிவபிரசாத் அடிவாரம் முதலே தனிக்காட்டு ராஜாவாக எங்களுக்கெல்லாம் முன்னால் சென்று வழிகாட்டியாக சென்றது ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. ஒரு இடத்தில் கூட தந்தை மகனுக்கு வழிகாட்ட வில்லை. நண்பர்கள் இருக்க பயமேன் என்று தந்தையும் விட்டுவிட்டார்.
சிறிது நேரம் அந்த இளம் வாலிபனுடன் (எட்டு வயது) பயணிக்கும் அனுபவம் எனக்கு கிடைத்தது. அப்போது மழை நன்றாக பெய்து கொண்டிருந்தது. சிவா தலைக்கு ரெயின் கேப் போட்டுகொள் என்று நான் சொன்னவுடன் மழை என்னை ஒன்றும் செய்யாது அங்கிள் மழையில நனையத்தானே வந்திருக்கோம் என்று சொல்லி அசத்தினான்.
- சிவா மழை தொப்பி இல்லாமல்
வழக்கமாக எங்களுடன் திருநெல்வேலியில் இருந்து பயணிக்கும் கருப்புசாமி அண்ணாவும் இந்தமுறை தன்னுடைய பிரதிநிதியாக அவருடைய மகன் சந்தோஷை அனுப்பியிருந்தார். அந்த இளைஞனும் யாருடைய உதவியையும் எதிர்பாராமல் களமிறங்கியது மகிழ்வாக இருந்தது.
- சந்தோஷ் காலை உணவருந்தி கொண்டிருந்த தருணம்
நான்பயணிக்கும் ஒவ்வொரு மலையும் ஏதாவது ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் எனக்கு. முதன்முதலாக வெள்ளியங்கிரி பயணித்த போது கை கால்கள் எங்கும் பனி பரவி ஒருவிதமான பரவச நிலையை கொடுத்தது. குமார பர்வத மலை எங்கள் குழுவுக்கு காற்றின் வேகம் எப்படி இருக்கும் என்று காட்டியது. அகஸ்தியர் கூடம் காற்று மழை மேகத்தின் அடர்த்தி காட்டருவியின் வேகம் எப்படி இருக்கும் என்று உணர்த்தியது.
- நான் நானேதான்
ஒவ்வொரு இரண்டரை கிலோ மீட்டரையும் காட்டும் ஒரு ஒளிவட்டம் போன்று பதாகை சொருகி வைத்துள்ளனர். எங்காவது உட்காருவதற்கு பாறைகள் இருந்தால் அட்டைகள் கண்டிப்பாக ஏறும் என்பதால் நடந்து கொண்டே இருக்க வேண்டியதாயிற்று.
காற்றின் வேகமும் மழையின் தாக்கமும் இருந்ததால் மலையில் புற்கள் தான் அதிகம் இருந்தன. மலையின் ஓரங்களில் அருவிகளை ஒட்டி உயர்ந்த மரங்கள் மூங்கில்கள் ஆதிக்கம் செலுத்தி இருந்தன. கேமராவையோ செல் போனையோ கண்ணை மூடிக்கொண்டு சொடுக்கினால் கிடைப்பதெல்லாம் கண்கொள்ளா காட்சியாகவே இருக்கு.
- ஆகாயம் மேலே பூலோகம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே
குதிரை முக் முழுவதும் சிரபூஞ்சி போன்று மழை பெய்து கொண்டே இருந்தது அட்டை பூச்சிகள் கடிப்பதும் உடன் வரும் ட்ரெக்கர்கள் சகதியில் வழுக்கி உருண்டு கொண்டு போவதும் என்று பொழுது போனதே தெரியவில்லை. எங்களோடு பயணித்த அரவிந்த் அமிர்தராஜ் ஓரிடத்தில் வழுக்கி கொண்டே சென்றார் நான் விளையாட்டாக அரவிந்த் ஸ்கேட்டிங் நல்லா கத்து வச்சிருக்கீங்க என்று கமன்ட் அடித்ததும் இன்றும் மனதில் அப்படியே இருக்கிறது.
- பசுமை போர்வை
ஐந்து கிலோ மீட்டர் தொலைவு வரை சமதளம் சிறிய மேடு சிற்றருவிகள் என்று இருந்ததால் இந்த பயணம் சாதாரணமானது என்று நினைத்த எங்களுக்கு கடைசி இரண்டரை கிலோ மீட்டர் ஓரளவுக்கு சவாலாகவே அமைந்தது. மலை உச்சிக்கு செல்லும் போது காற்றின் வேகம் கூடுதலாகவும் மழை முகத்தில் ஓங்கி அறைந்தும் பெய்து கொண்டிருந்தது.
- மழைக்கால மேகம் ஓன்று ஊஞ்சல் ஆடுகிறது
மேலே இருந்து இறங்கி வந்தவர்கள் வழக்கம் போல மேலே கடுமையான மழை பெய்கிறது போகாதீர்கள் என்று சொல்லி விட்டு நாங்கள் பாதியிலேயே திரும்பி வந்து விட்டோம் என்றும் சொல்லிவிட்டு போனார்கள். போகணும்னு முடிவு பண்ணிட்டா அப்புறம் எங்க பேச்சையே கேட்டகாத மனிதர்கள் நாங்கள். அதை பற்றி எல்லாம் கவலை படவில்லை.
மலை உச்சியில் மழை மேகம் கவ்வி இருந்ததால் சுற்றிலும் காட்சிகள் தெரியவில்லை. அது ஒன்று மட்டுமே ஏமாற்றம்.
- காணும் இடமேல்லாமே இன்பம் தான்
இறங்கும் போது பெங்களூருவில் இருந்து நிறைய நண்பர்கள் நண்பிகள் மிகுந்த சிரமப்பட்டார்கள். ட்ரெக்கிங் ஸ்டிக் வைத்து கொண்டிருந்ததால் எங்கள் குழுவுக்கு சிரமம் ஏற்படவில்லை. ஆனால் மற்ற குழுவினர் ஏன் ஸ்டிக் வைத்து கொள்ள வில்லை என்பது அவர்கள் இறங்கும் முறையில் இருந்து தெரிந்தது. அது ரொம்பவும் ரொமான்டிக்காக இருந்தது. கி கி போங்க எனக்கு வெட்கமா இருக்கு இதுக்கு மேல விவரிக்க.
- Jpeg
கடைசி சிகரம் ஏறுவதற்கு முன் வயிற்றில் எதோ கிள்ளுவதை போன்ற உணர்வு. அட அட்டை பூச்சியெல்லாம் இல்லைங்க பசி அதற்க்கு மேல் நடக்க முடியாது என்று சொல்லி விட்டன கால்கள். ஒர்டிடத்தில் அமர்ந்து மதிய உணவை நானும் அந்தோணியும் உண்டுவிட்டு சிறிது ஓய்வுக்கு பிறகு மீண்டும் சிகரம் நோக்கி நடந்த சிறிது நேரத்தில் குதிரை முக் சிகரம் தொட்டாச்சு.
- Jpeg
கையில் வாட்ச் கட்டவில்லை மழை பெய்து கொண்டிருந்ததால் மொபைலையும் பாலித்தீன் கவரில் வைத்து பத்திரபடுத்தியதால் நேரம் தெரியவில்லை. எதிரே வந்து கொண்டிருந்த வெளிநாட்டு பெண் ஒருவரின் வாட்சில் மணி பார்த்த போது மணி மூன்று காட்டியது. காடுகளில் மாலையில் அதிக நேரம் செலவிட முடியாது சீக்கிரம் திரும்பி விட வேண்டும் என்பதால் அதிக நேரம் சிகரத்தில் நிற்கவில்லை. உடனே இறங்க ஆரம்பித்தோம்.
- Jpeg
எல்லா ட்ரெக்கிலும் முன்னே செல்லும் எங்கள் சக தோழர் பிரதீப் சிறிது உடல் நலமில்லை என்று கடைசியில் வந்து கொண்டிருந்தார். அவருக்கும் பின் வழக்கமாக எங்கள் குழு தலைவர் மேய்பவராக எப்போதுமே பின்னால் தான் வருவார்.
மாலை ஆறுமணிக்கு இறங்கும் போது தூரத்தில் இருந்து எங்களுக்கு ஒரு பைசன் காட்சி கொடுத்தது.
என்னை பார்த்ததும் நீங்கள் இறங்குங்கள் நாங்கள் பின்னே வந்து விடுகிறோம் என்று சொல்லவும் நாங்க இறங்க ஆரம்பித்தோம். அடிக்கடி ட்ரெக்கிங் செல்வதால் என் கால்கள் நன்றாக ஒத்துழைத்தன. நண்பர் அந்தோணிக்கு மூட்டு வலிக்க ஆரம்பித்து விட்டது. அவருடன் பயணிக்க வேண்டியதிருந்தால் அடிவாரம் வந்து சேர இரவு 8.00 மணியாகி விட்டது.
அடிவாரத்தில் எங்களுக்காக காலை மதியம் உணவு கொடுத்தவர்கள் சுவையாகவும் சூடாகவும் பஜ்ஜி டீ கொடுத்து அசத்தினார்கள். ஒவ்வொருத்தராக வந்து ரெயின் கோட்டை கழற்றும் போது அட்டை பூச்சிகள் கொத்து கொத்தாக விழுந்தது மாலை வேளையில் மகிழ்வை கொடுத்தது.
சிற்றுண்டி முடித்தவுடன் இரவு உணவு அங்கே முன் பதிவு செய்யாத காரணத்தால் சீக்கிரம் கிளம்பலாம் என்று அவர்களிடம் இருந்து மகிழ்வுடன் விடை பெற்றோம். காலை எங்களை இறக்கி விட்ட ஜீப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து எங்களை அழைத்து சென்றது.
அங்கிருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்று இருப்போம். சாலையின் குறுக்கே மரம் ஒன்று சரிந்து விழுந்து விட்டது. ஜீப் போகாது என்று சொல்லிவிட்டார்கள். எங்களுடன் பயணித்த பால்ராஜ் என்ற இளைஞன் ஏன் போகாது எல்லோரும் இறங்குங்கள் மரத்தை தூக்கி வீசிவிடலாம் என்று சொல்ல எல்லோரும் ஒன்றன் பின் ஒன்றாக இறங்கி ஐலசா... ஐலசா பாட்டு பாடி இழுத்து கொண்டிருந்தார்கள்.
நானும் கேப்டனும் இறங்கி நாமும் ஒரு கை பிடிக்கலாம் என்று ஜீப்பில் இருந்து இறங்குவதற்குள் மரம் பயந்து விட்டது. ஹா ஹா இளைஞர்கள் அசத்தலாக தூக்கி ஓரமாக வைத்து விட்டனர். அதில் சிறிது காலதாமதமாகி விட இரவு உணவு கிடைப்பது சிரமம் என்றாகி போனது.
கலாசா என்ற இடத்தில் ஒரு பெரிய உணவகம் இருந்தது. இரவு உணவு கிடைக்குமா என்று கேட்டவுடன் சரி உக்காருங்கள் என்று புரோட்டா கேட்டவர்களுக்கு புரோட்டா மாவும் சோறு கேட்டவர்களுக்கு அரிசியும் குக்கரையும் எடுத்துகொண்டு சென்று அரைமணிநேரத்தில் சுவையான புரோட்டாவும் சோறும் பரிமாற அன்றைய பொழுதில் எல்லாமே இனிமையாக முடிந்த மகிழ்ச்சியில் அன்னபூரணி கோவில் இருக்கும் ஹோரநாடு என்ற இடத்தில் எங்களுக்கான தங்கும் ஏற்பாட்டை செய்திருந்தார் எங்கள் கேப்டன்.
உணவு வயிற்ருக்குள் சென்றவுடன் கண்கள் சொக்க ஆரம்பித்து விட்டன. தங்கும் விடுதிக்கு சென்று ஆனந்தமாக உறங்க ஆரம்பித்தோம்.
- டிவைன் ட்ரெக்கர்ஸ்




















No comments:
Post a Comment