Saturday, 18 July 2015

வெள்ளிங்கிரி பயண கட்டுரை


வெள்ளிங்கிரி மலைச்சாரலில்


வாழ்வில் முதல் முதலாக முகநூலில் அறிமுகமான நண்பர் ஒருவரை நேரில் சந்திக்க போகிறோம் என்ற ஆவல் முதல் முதலாக வெள்ளிங்கிரி மலை ஏற இருக்கிறோம் என்பதை விட அதிகமாக இருந்தது. முகநூல் நண்பர் பத்மஸ்ரீ விஜயகுமார் திடீரென்று இன்பாக்ஸில் வெள்ளிங்கிரி ட்ரெக்கிங் செல்கிறேன் வருகிறீர்களா என்று கேட்டவுடன் இன்ப அதிர்ச்சி. உடனே வருகிறேன் என்று டைப் அடிக்க உங்கள் போன் நம்பர் கொடுங்கள் அண்ணா என்று கேட்டார். மறுநிமிடம் இனிமையான கொங்கு தமிழில் “அண்ணா நமஸ்காரம் எப்படி இருக்கீங்க” என்று அன்பான விசாரிப்பு. என்னையும்“Vellingiri 15th July wed” என்ற வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்து விட்டார். அதன் பிறகு நடந்தது எல்லாமே ஒரு வரலாறு. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பின் அந்த ஜூலை 16ம் வந்து விட்டது.

ஒரு வாட்சப்பை வைத்து எவ்வளவு பெரிய ட்ரெக்கிங்கை ஒருங்கிணைக்க முடியும் என்று எனக்கு காட்டிய முதல் அனுபவம். ஒவ்வொருவரும் எங்கே இருக்கின்றனர் என்பதை நிமிட கணக்கில் அப்டேட் செய்து அசத்தினர். இன்றைய ட்ரெக்கிங்கிற்கு தேர்வானவர்களில் பெரும்பாலானவர்கள் முகநூல் நண்பர்கள் முதல் முறையாக சந்தித்து கொண்டவர்கள். வந்தவர்கள் அத்துணை பேரும் வேறு வேறு துறையில் ஜாம்பவான்கள். ட்ரெக்கிங் தொடங்கும் முன் எங்கள் எல்லோரையும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம்.

பத்மஸ்ரீ விஜயகுமார் 

நெல்லையில் இருந்து வந்த நண்பர் ராஜீவ் மலை ஏறுவதில் என்ன பிரச்சனைகள் வந்தாலும் எப்படி சமாளிப்பது என்பதில் இருந்து திரும்பி வருவது வரை செய்ய வேண்டியவற்றை பற்றி விளக்கினார். எல்லோருக்கும் காலை உணவு மதியம் உணவு கோவை டாட்டாபாத்திலிருந்து வந்திருந்த நண்பர் குமரேசன் பொட்டலங்களாக கொடுக்க காலை 7.00 மணிக்கு மலை ஏற தொடங்கிவிட்டோம். என்னவெல்லாம் எடுத்து வரவேண்டும் எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்பது முதல் ஏற்கனவே வாட்சப்பில் அறிவுருத்த- பட்டிருந்ததால் எங்கள் குழு எவரெஸ்ட் மலையேறும் குழுவை போல் தனித் தன்மையுடன் திகழ்ந்தது. .



வெள்ளிங்கிரி மலை இந்துக்களால் தென் கயிலாயம் என்று போற்றபடுகிறது. எங்கள் குழுவில் இருந்த ஒரு சிலர் தவிர மற்றவர்கள் இயற்கை ஆர்வலர்களாகத்தான் தெரிந்தார்கள். மத நம்பிக்கை இருப்பவர்களாக இருந்தால் அம்மாவாசை அன்று மலை ஏறமாட்டார்களாம். மற்ற நாட்களில் வனத்துறை மேலே செல்ல அனுமதிப்பதில்லை. வருடத்தில் மூன்று மாதங்கள் சீசன் தவிர மாதம் இரண்டு நாட்கள் அதாவது பவுர்ணமி மற்றும் அமாவாசை அன்று மட்டும் மேலே செல்வதற்கு எந்த அனுமதியும் தேவை இல்லை. பவுர்ணமி அன்று கூட்டம் அதிகம் இருக்கும் என்று அமாவாசை நாளை தேர்ந்தெடுத்திருந்தது எவ்வளவு அருமையான முடிவு என்று மேலே செல்ல செல்ல உறுதியானது. எங்களை தவிர பறவைகள் குரங்குகள் மட்டுமே மேலே இருந்தன.


கருப்புசாமி அண்ணன்  அரவிந்த் அமிர்தராஜ் 
கதிர், ரஞ்சித் 

கொடி ஒன்று மரத்தை
வளைத்திருக்கும் காட்சி 


இரண்டாயிரம் படிகள் ஏறியிருப்போம். இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்துவிட்டது. கால்கள் இதற்கு மேல் வேண்டாம் திரும்பி போய் விடு என்று மூளைக்கு கட்டளை இட்டுகொண்டிருந்தது. ட்ரெக்கிங் ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் நன்கு பரிட்சயமான எக்ஸ்பர்ட்டுகளை முன்னால் ஒருவரும் இடையில் ஒருவரும் கடைசீயில் பேக் அப்புக்கு ஒருவருமாக பிரிந்து அழகாக கூட்டி சென்றனர். எங்களுடன் வந்த பத்மஸ்ரீ விஜயகுமார் இன்னும் ஒரு இரநூறு படிகள் தான் கடினமாக இருக்கும் பிறகு உங்களுக்கு ஈசியா இருக்கும் என்று மோட்டிவேட் செய்து கொண்டே வந்தார். ஆனால் அந்த இரநூறு படிகள் கழித்தும் மறுபடியும் இதைவிட கடினமாக தான் இருக்க போகிறது என்பது போக போகத்தான் புரிய ஆரம்பித்தது.


கைதட்டி சுனை காலை உணவு 
உண்ணும் போது  

ஐந்தாவது மலையில் இருந்து சமவெளி 
பாம்பாட்டி சித்தர் குகை 
பாம்பாட்டி சித்தர் குகையின்
உட்புற காட்சி 


இதற்கு மேலும் கால்கள் நடக்கவே முடியாது என்று சொல்லும்போது முன்னே சென்ற அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து எங்களுக்காக காத்திருந்தது மனதுக்கு இதமாக இருந்தது. அங்கே எல்லோருக்கும் நிலக் கடலை யும் வெல்லமும் திருப்பூரில் இருந்து வந்த செந்தில் பரிமாறினார். மணி 8.00 இருக்கும். இன்னும் அரைமணி நேரத்தில் காலை உணவு எடுத்து கொள்ளலாம் என்று குழு தலைவர் ராஜீவ் சொல்லி வாருங்கள் புறப்படலாம் என்று சொன்னவுடன் பயண குழு அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாரானது.

நீர்வரும் பாதைகளில் ஏறி 
செல்வது  அரவிந்த்  அமிர்தராஜ் 
முதல் மலை முழுவதும் உயர்ந்த மரங்கள் ரம்மியமான பறவைகளின் ஒலி அந்த ஒலிகளுக்கு மூங்கில்கள் உரசும் புல்லாங்குழல் கானம் காற்றின் ஒலி என்று ஒரு மெல்லிசை போட்டியே அங்கே நடந்து கொண்டிருந்தது. கால்கள் மூளைக்கு இட்ட கட்டளையை மூளை நிராகரித்து மீண்டும் நடக்க மூளை கால்களுக்கு உத்தரவிட்டது. நிலக்கடலையும் வெல்லமும் கொடுத்த உற்சாகமும் சேர்ந்து கொள்ள மீண்டும் பயணம் முதலில் இருந்தே ஆரம்பிப்பது போன்ற ஒரு உணர்வு.

மலை ஏறும் போது மேலே செல்ல செல்ல நமக்கு சுவாச காற்று குறைவாகத்தான் கிடைக்கும். பிராணவாயுவின் அடர்த்தி குறைவாக இருக்கும். முடிந்த வரை மலை உச்சியில் தங்குவதை தவிர்ப்பது நல்லது. இரவு நேரங்களில் அங்கே இருக்கும் மரங்களும் பிராண வாயுவை சுவாசித்து கரியமில வாயுவை வெளியே விடுவதால் சுவாசிப்பது சிரமாமாக இருக்கும். என்ன ஆனாலும் மாலைக்குள் அடிவாரம் வந்துவிட வேண்டும் என்ற வேகம் எங்கள் குழுவில் எல்லோரிடமும் காண முடிந்தது.

இரண்டாவது மலையில் புதிதாக வந்திருந்தவர்களை அழைத்து செல்லும் பொருப்பு விஜயகுமரிடமிருந்து குமரேசன் வசம் மாறியது. சென்னையில் இருந்து வந்திருந்த அமிரதராஜ் மற்றும் திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த மணிகண்டன் இருவரும் இரண்டு புறமும் தோளோடு தோள் சேர்ந்து மெதுவாக அடுத்த மலையை அளக்க ஆரம்பித்தோம். நாங்கள் தான் கடைகுட்டிகள்.

எங்களுடைய குழு தலைவர் ராஜீவ்  நெல்லையிலிருந்து 

செந்தில்ராஜ்  திரவியம் (இந்த கட்டுரையாளர்)
இப்போது மெல்லிசையாக இருந்த காற்று ஜாஸ் மியூசிக் வாசிக்க ஆரம்பித்திருந்தது. மூங்கில்கள் மத்தளம் கொட்டியது. வானத்தில் இருந்து பேரிரைச்சல் ஓ வென காற்று மரங்களின் ஊடே ஊடுருவும் சத்தம் வேகமாக மழை அடிக்க போகிறதோ என்ற சந்தேகத்தை கொடுத்தது. மரங்களின் ஊடே அங்கொன்றும் இங்கொன்றும் கருமையாக இருந்த பெரிய பாறைகள் யானை ஒன்று அங்கே நிற்கிறதோ என்ற திகிலை கொடுத்தது. உற்று பார்த்தபின் தான் அவை பாறைகள் என்று ஊர்ஜிதம் செய்ய முடிந்தது. சூரியன் எங்கே இருக்கிறது என்பதை யூகிக்க கூட முடியவில்லை.
நீங்கள் செல்லும் பாதையில் யானை குறுக்கிட்டால் பள்ளத்தை நோக்கி ஓடுங்கள் என்று எங்கள் குழு தலைவர் நண்பர் ராஜீவ் அறிவுறுத்தி இருந்தார். பள்ளத்தை நோக்கி துரத்த அவைகளுக்கு விருப்பம் இருக்காதாம்.
முதல் மலையில் ஏறும்போது இருந்த மூச்சிறைப்பு நின்று சுவாசம் சீராக போய் கொண்டிருந்தது ஓரளவு நிம்மதியை தந்தது. அரை மணி நேரத்தில் காலை உணவு உட்கொள்ள கைதட்டி சுனை என்ற இடத்தை நெருங்கினோம். இயற்கையான ஒரு நீரூற்று. பூமியின் ஆழத்தில் இருக்கும் நீரோட்டத்தை மலை அழுத்தும் போது கேப்பிலேரி போர்ஸ் காரணமாக மலை இடுக்குகள் வழியாக பொத்து கொண்டு நீர் மேலே வருமாம். அப்படி பொத்து கொண்டு வந்த இடத்தில் யாரோ ஒரு மனிதர் மூங்கிலை இரண்டாக பிளந்து இடையே இருக்கும் தடுப்புகளை சுரண்டி விட்டு அந்த ஊற்றின் கண் மீது சொருகி வைத்திருந்தார். அதனால் மலை பயணம் செல்பவர்கள் தங்களுக்கு வேண்டிய அளவு தண்ணீரை சேகரித்து கொள்ள ஏதுவாக இருந்தது.

அங்கே குரங்குகள் கூத்தாடி கொண்டிருந்தன. கொடி ஒன்று பெரிய மரம் ஒன்றை இழுத்து தள்ளி இருந்தது. அவ்வளவு பெரிய கொடியை நான் பார்த்ததே இல்லை. ஒருவரால் கட்டி பிடிக்க முடியாத அளவு விட்டம். நான்கு பேர் சேர்ந்தாலும் கட்டி பிடிக்க முடியாத அளவுக்கு மிக பெரிய மாமரம் ஒன்றையும் காண முடிந்தது. மந்திகளுக்கு உணவு சப்பளை இங்கிருந்துதான் வருது போல.                           

காலை உணவு அவ்வளவு ருசியாக இருந்தது. சப்பாத்திக்கு தக்காளி தொக்கு. சாப்பிட்டு விட்டு மீண்டும் மலை ஏற வேண்டும். அடுத்த மலையில் சாரல் மழை லேசாக பூ போல் தூவி எங்களை வரவேற்றது. அந்த மழையில் நனைய வேண்டும் என்றே ஆசை. ரெயின் கோட் இருந்தும் யாரும் போடவில்லை. ஒரே ஒரு பாறை ஒரு கால் கிலோ மீட்டர் நீளம் இருக்கும். மேலே செல்வதற்காக படிகட்டுகளாக சீவி விட்டிருந்தார்கள். அப்படி செய்திருக்காவிட்டால் பாறை கயிறுகள் இருந்தால் தான் மேலே செல்ல முடியும்.

            நடக்க நடக்க மணிகண்டனிடம் இருந்து புளிப்பு மிட்டாய் மற்றும் காய்ந்த கருப்பு திராட்சைகள் ஒவ்வொன்றாக கிடைத்து கொண்டே இருந்தது உடலுக்கு வேண்டும் அளவு பலம் சேர்ந்து கொண்டே இருந்தது. சற்று நேரத்தில் சிறிய ஓடை ஒன்று குறுக்கிட்டது. எங்கள் குழுவில் இருந்த எல்லோரும் உடைகளை களைந்து குளிக்க ஆரம்பித்தனர். கிளம்பும் போதே நண்பர் ஒருவர் அங்கே நிறைய அட்டை பூச்சிகள் இருக்கும் என்று எச்சரித்து அனுப்பியதால் குளிக்கும் விபரீதமான முடிவை கை விட்டேன். போதாத குறைக்கு நீரின் வெப்பநிலை ஐந்து டிகிரிக்கும் குறைவாக இருந்தது.

பாறைகளின் ஊடே நடை பயணம் 
வித்தியாசமான மண் அமைப்புகள் 
          சிறுவன் ஒருவனும் அவன் உறவினர் ஒருவரும் மேலிருந்து கீழே வந்து கொண்டி ருந்தனர். அந்த சிறுவன் காலில் ரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது. அவன் காலில் கடித்த அட்டை அவனுக்குள் ஹிரிடினை செலுத்தி இருந்தது அது ரத்தம் உறை யாமல் செய்து விடும்.           அட்டை கடித்து சிறிது நேரம் வரை அந்த என்சைமின் பவர் இருக்கும்  வரை ரத்தம் வழிந்து கொண்டேதான் இருக்கும். பிறகு தானாகவே நின்று விடும்.

    அந்த சிறுவன் ரத்தம் வழிவதை பார்த்து அழுது கொண்டிருந்தான். அவனை பார்த்தவுடன் அட்டை கடித்து விட்டதா என்று நான் கேட்க ஆம் என்று மேலும் கீழும் தலையை ஆட்டினான். நீ கொடுத்து வைத்தவன். உனக்கு வாழ்நாள் முழுக்க ரத்தம் கட்டியாகாது. உனக்கு ப்ரெயின் டியூமர் வரவே வராது என்று நான் சொல்லவும் அவனுடன் கூட வந்தவர்களுக்கும் உற்சாகம் பற்றி கொண்டது. டேய் அட்டை கடிப்பது நல்லதாம் டா என்று சொல்லவும் அழுது கொண்டிருந்த அவனுக்கு சிரிப்பு அடங்கவில்லை. உற்சாகத்துடன் கீழே இறங்க ஆரம்பித்தான். நாங்கள் மேலே ஏற ஆரம்பித்து விட்டோம்.

     மேகங்கள் என்னை தொட்டு போவதென்ன அந்த மின்னல்கள் என்னை உரசி போவதென்ன என்று வைர முத்து உண்மையாகவே இப்படி ஒரு சிகரத்தில் நின்று கொண்டு தான் சிந்தித்திருக்க வேண்டும். ஆறாவது மலை ஏறியவுடன் பறவைகள் குரங்குகள் எல்லாம் விடை சொல்லி சென்று விட்டது. சற்று நேரம் அமைதியாக இருந்தது. டிக் டிக் டிக் என்று சுவற்று கோழி என்று சொல்வார்களே அதே போன்று எதோ ஒரு வண்டு சப்தம் எழுப்பி கொண்டிருந்தது.

      பெரிய பெரிய மரங்கள் ஐந்தாவது மலையோடு ஆதிக்கம் செய்வதை நிறுத்தி கொண்டன. அங்கே குறிஞ்சி குறுஞ்செடிகள், லெமன் கிராஸ் (Cymbopogon citratus), மற்றும் மலை நெல்லி மரங்கள் மட்டுமே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வளர்ந்திருந்தன. டிஸ்கவரி சானலில் வரும் பியர் கிரிஸ்சுக்கு சவால் விடும் அளவுக்கு பாதை மாறியிருந்தது. ஒவ்வொரு மலையும் ஒரு விதமான பயோ ஸ்பியர்களாக இருந்தன. மொத்தமாக ஒரே மலைதான். அங்கே காணப்படும் ப்ளோரா பானா அதாவது தாவரங்கள் மற்றும் விலங்குகள் இருப்பதை வைத்து வகை படுத்தி இருக்க வேண்டும். ஒரு மலை களிமண்ணாலும் இன்னொரு மலை செம்மண்ணாலும் வேறு ஒரு மலை சுண்ணாம்பு கற்களாலும் உருவாகி இருந்தது. மலை உச்சியில் இருந்து நல்ல மழை பெய்யும் போது வரும் மழை நீர் உருவாக்கி இருந்த பாதை தான் இப்போது எங்களுக்கு நடை பாதை.

          மேகங்கள் அறுபது முதல் எழுபது கிலோமீட்டர் வேகம் இருக்கும் முகத்தில் வந்து மோதின. நடப்பது கடினமாக இருந்தது. பார்க்கும் திறன் 10 மீட்டாருக்கும் குறைவாக இருந்தது. லேசாக சாரல் அடித்து கொண்டிருந்ததால் பாதை பனிச்சறுக்கு விளையாட்டு மைதனமாகி விட்டுருந்தது. ஒரு இடத்தில் கால் வைத்ததும் சர் என்று வழுக்கி கொண்டே சென்றது. கையில் இருந்த மூங்கில் குச்சி எதோ ஒன்றில் மாட்டி மேலும் வழுக்கி செல்லாதவாறு தாங்கி பிடித்து கொண்டது. நான் போட்டிருந்த ரெயின் கோட்டில் வெள்ளையாக ஐஸ் பரவியிருந்தது. கை வைத்து தடவினால் ஜில் என்று இருந்தது. கைகள் உறையாமல் இருக்க கை தட்டி கொண்டே மேலே எறவாரம்பித்தோம்.

ஏழாவது மலை ஏறும்போது 

ஏழாவது மலை நோக்கி பயணம் 
      
         கடைசி மலை முழவதும் வழுக்கும் பாறைகளும் களிமண் தரையாகவும் நடப்பதற்கு பெரிய சவாலாக இருந்தது. கீழே இறங்கி வந்த ஒரு சிலர் சூவை கழட்டி விட்டு செல்லுங்கள் என்று அறிவுறுத்தினர். ஆனால் ஏற்கனவே குளிரில் கை விறைத்திருந்தது. சூவையும் கழட்டி விட்டால் தாக்கு பிடிப்பது கடினம் என்று நிதானமாக நடந்து சென்றேன். ஒரு இடத்தில் ஒரு பெரிய வழுக்கு பாறை மட்டுமே இருந்தது. எப்படி ஏற வேண்டும் என்று தெரியவில்லை. ராஜீவ் கையால் தடவி பார்த்ததில் மேலே மூன்று விரல்கள் மட்டும் பிடிப்பதற்கு ஒரு மூன்று ஓட்டைகள் இருந்தது. கிளிப் ஹேங்கர் என்ற படத்தில் மலையேறும் ஹீரோ ஒரே ஒரு ஓட்டையில் ஒத்தை விரலில் மலை சரிவில் தொங்கி கொண்டிருப்பார் அதே போல் மூன்று விரல்களை மட்டும் மாட்டி மேலே உடம்பை எக்கி ஏறியது புதிய அனுபவாமாக இருந்தது.

      உடன் வந்த ராஜீவும் குமரேசனும் பொறுமையாக புதியவர்கள் ஏறும் வரை காத்திருந்து பின் மேலே வந்தனர். கடைசியில் ஒருவழியாக சிகரம் தொட்டாச்சு. அங்கே இருந்த இரண்டு பிரமாண்ட பாறைகளின் மேலே ஒரு பாறை கூரை போல் இருந்தது. ஒவ்வொரு பாறையும் ஆயிரம் டன் எடை இருக்க வேண்டும். ஒரு பெரிய பாறை ஒரு நந்தி வானத்தை அண்ணாந்து பார்த்து கொண்டிருப்பது போல் இருந்தது. அங்கே இயற்கையான ஒரு குகையின் உள்ளே இருந்த சுயம்பு லிங்கத்திற்கு மாலைகள் போட்டு பூஜை செய்து வைத்திருந்தனர்.

          ஒரு பத்து நிமிடம் கூட இருக்காது எங்கள் குழு தலைவர் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு இறங்கலாம் என்று சொல்லி விட்டார். எங்களுக்கு முன் சென்றிருந்தவர்கள் நாங்கள் மேலே செல்வதற்குள் கீழே இறங்கி சென்று விட்டனர். பருவ நிலை எப்படி வேண்டுமானாலும் மோசமாக மாறும் என்று அதிக நேரம் அங்கே இருக்கு முயற்சிக்க வில்லை. மதிய உணவுக்கு புளியோதரை அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் மணிகண்டன் நெல்லையில் இருந்து அல்வா வாங்கி வந்திருந்ததை ஆளுக்கு ஒன்றாக கொடுத்தார். அருமையான சுவை.

        மலை மிகவும் செங்குத்தாக இருந்ததால் ஏறுவதற்கு எவ்வளவு உழைப்பை செலவிட வேண்டி இருந்ததோ அதே அளவு உழைப்பு இறங்குவதற்கும் செலவிட வேண்டி இருந்தது. கையில் இருந்த பணம் ஜிம்பாப்வே டாலராக மாறி விட்டது. ஆம் அங்கே பணம் வெறும் பேப்பர் தான். வாங்குவதற்கு ஆள் இருந்தால் தானே அதற்கு மதிப்பு. கீழே இறங்கி வரும் போது இரண்டாவது மலையில் ஒரு ஆதிவாசி இளைஞன் எங்களுக்கு சுக்கு காப்பி போட்டு கொடுத்தார். அந்த நேரம் அதன் சுவைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்பது நிச்சையம். கடைசி மலை வரும் போது இருட்ட ஆரம்பித்து விட்டது. அமாவாசை என்பதால் பார்வை திறன் இல்லாதவர்களாக அனைவரும் தடவி தடவி இறங்க ஆரம்பித்தனர். ஆனால் எங்கள் குழுவினருக்கு ஏற்கனவே கொடுத்த லிஸ்டில் டார்ச் லைட் இருந்ததால் நாங்கள் இறங்குவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.

                       
வெள்ளிங்கிரி மலையில் சிவலிங்கம் இருக்கும் குகை மற்றும் நடை பாதை  
சுயம்புருவாய் இருக்கும் வெள்ளிங்கிரி கைலாசநாதர் 
கடும்குளிரில் சிகரத்தின் உச்சியில் நான் 
           ஒரு ஆயிரம் படிகள் இறங்கியதும் குமரேசனையும் செந்திலையும் காணவில்லை. சரி வரட்டும் என்று காத்திருந்தோம். இரவில் வெளிச்சம் இல்லாமல் தரையை தேடிகொண்டிருந்த ஒரு சிலரை அவர்கள் ஆதரவாக அழைத்து வந்தது நெகிழ்வாக இருந்தது. சபரி மலை பல முறை பெருவழியில் நடந்த அனுபவம் இருந்தாலும் இந்த மலை ஏறி இறங்குவது ஒரு மிக பெரும் சவாலாக எனக்கு இருந்தது. கடைசி படிக்கட்டை பார்த்தவுடன் உற்சாகம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. இனி இப்படி ஒரு பயணம் எப்படி கூப்பிட்டாலும் போவதில்லை என்று முடிவு அப்போது செய்து விட்டேன். உடல் முழுவதும் குத்து சண்டை போட்டது போல் வலி.


          ஒருவழியாக காரில் ஏறி நண்பர்களை அவர்கள் ஊருக்கு செல்ல அனுப்பி வைத்து விட்டு வீட்டிற்கு வந்து தூங்க ஆரம்பித்தவன் தான். அடுத்தநாள் பத்மஸ்ரீ விஜயகுமார் மொபைலில் கூப்பிட்ட போது தான் கண் விழித்தேன். அண்ணா கால் வலி எப்படி இருக்கு என்று அன்பான விசாரிப்பு. அடுத்த நிமிடமே வலி எல்லாம் மறந்து போனது. மனம் இன்னுமோர் பயணம் எப்போது என்று ஏங்க ஆரம்பித்து விட்டது.

மேகங்கள் என்னை சுற்றி போவதென்ன
அந்த மின்னல்கள் என்னை உரசி போவதேன்ன்ன்ன.....

மீண்டும் ஒரு பயணத்தில் சந்திக்கிறேன்.


Wednesday, 21 November 2012

Peaceful co-existence

நகர மயமாக்கலின்  பக்க விழைவு இந்த காகங்களுக்கு வாழ ஒரு மரம் கூட  இல்லை பாவம் மின் கம்பத்தில் கூடு கட்டி தன்  இனத்தை அழியாமல் காக்க படும் பாடு.  இடம் சென்னை காட்டுப்பாக்கம் நாள் 16 நவம்பர் 2012. என் அலைபேசியில் கிளிக்கியது.