Friday, 18 December 2015

குமாரபர்வதா ட்ரெக்கிங்


"நீங்க வரும்போது ஒரு பத்துகிலோ பழைய அரிசி சாக்கு கொண்டு வர முடியுமா ?"

என்று குமாரபர்வதா ட்ரெக்கிங் செல்வதற்கு முன் என்னிடம் இந்த கேள்வியை கேட்டவர் எங்கள் ட்ரெக்கிங் குழுவின் தலைவர் கேப்டன் ராஜீவ். இயற்கை மீது பற்று கொண்டிருக்கும் யாருக்கும் இந்த கேள்வி எதற்கு கேட்கிறார் என்று சட்டென்று புரிந்து விடும். இருப்பினும் பதிலை அவரிடமே இருந்து தெரிந்து கொள்ளும் ஆவலில் "எதுக்கு சார் ? " என்று பதில் கேள்வி கேட்டு வைத்தேன்.



"நாம் மலையில் ஏறி திரும்பி வரும் போது உங்களால் முடிந்த அளவு மேலே கிடக்கும் பாலித்தீன் பேப்பர்களை எடுத்து வரவேண்டும் அது தான் நம் இயற்கைக்கு செய்யும் சேவை" என்று சொல்லி முடித்தார்.
"அருமை சார் கட்டாயம் எடுத்து வருகிறேன்" என்று சொல்லி முடித்து ஒரு அரிசி சாக்கை பட்டியலில் முதலாவதாக சேர்த்து கொண்டேன்.
மூன்று மாதங்களுக்கும் முன்பாகவே திட்டமிடல், ரயில் பயண டிக்கட்டுகள் என்று குமரேசன் அருமையாக அசத்தியிருந்தார். கோயம்புத்தூர் ட்ரேக்கர்ஸ் நரசிம்மன் அவர்களும் பத்மஸ்ரீ விஜயகுமாரும் குழுவுக்கு தேவையான இனிப்பு அவல் வெஜிடபிள் பேல் என்று காலை மாலையும் செய்து கொடுத்து அசத்தியது இன்றும் நினைவில் இனிமையாக இருக்கிறது.

 



 மொத்தமாக 33 நண்பர்கள் பதிவு செய்து கடைசி நேர அலுவல் மற்றும் திடீர் திருமண அழைப்புகள் என்று ஒரு நான்கு பேரால் வரமுடியாமல் போக 29 பேருடன் எங்கள் குழு குமார பர்வத மலையை நோக்கி டிசம்பர் 2ம் தேதி பயணமானது.

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும்.

டிசம்பர் இரண்டாம் நாள் நடுநிசியில் சென்னையில் இருந்து மங்களூர் வரவேண்டிய ரயிலில் எங்களுக்கு எல்லோருக்கும் பயண டிக்கட் இருந்தது. ஆனால் மதியம் மூன்று மணிக்கே எங்களுடைய மொபைல் போன்களில் எஸ் எம் எஸ் வந்து சேர்ந்தது சென்னையில் கடுமையான மழை காரணமாக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டு விட்டது என்று. ஒவ்வொரு ட்ரெக்கிங்கின் போதும் எங்கே செல்கிறோமோ அந்த பெயரில் ஒரு வாட்சப் குரூப் தொடங்குவது எங்கள் வழக்கம். அந்த குரூப்பில் ட்ரெக்கிங் செல்லும் மெம்பர்கள் போன்கள் மட்டும் இணைக்கப்படும். ட்ரெக்கிங் செல்ல தேவையான அனைத்து அறிவுரைகளும் கேப்டனிடம் இருந்து எங்கள் எல்லோருக்கும் வந்து சேரும்.

ரயில் கேன்சல் ஆகவும் அந்த குரூப்பில் பரபரப்பு பற்றி கொண்டது. எல்லோரிடமும் இருந்து அடுத்தது என்ன செய்வது? என்ன செய்வது? என்ற கேள்விக்கணைகள் அடுத்தடுத்து பாயத்தொடங்கியது...

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா !!!

தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல் அப்பா !!!



 "சார் மலை மேல போறவங்க போடுற சாக்கலேட் பேப்பரை மொத்தமா பொறுக்கி எடுத்தா ஒரு நாலஞ்சு கிலோ வெயிட் வந்துடும் சார். போற வழியில போட்டுட்டு போனா கூட பரவாயில்லை சார் ஈசியா எடுத்துட்டு வந்துடலாம். அப்படியே கொண்டு போய் யாருமே போக முடியாத டீலாவில தூக்கி வீசிட்டு போவாங்க யார்னாலையும் அத சுத்தம் செய்ய முடியாது சார்"

"சார் நாம மேலே போகும் போது காட்டுல அமைதியா போவனும் சார், நம்மோட பேச்சு சத்தம் கூட அங்கே இருக்குற வைல்ட் அனிமல ரொம்ப டிஸ்டப் பண்ணும் சார்"

"போற வழியில ஒரு கட்டை கிடந்தால் கூட நாம அதை அசைக்காம போகணும் சார். அந்த கட்டைக்கு கீழ கூட ஏதாவது ஒரு உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கும் சார். அதைக்கூட நாம டிஸ்டர்ப் பண்ண கூடாது சார்"

"அட்டை பூச்சி கடிச்சா பிச்சி எரிய கூடாது சார், கேரம் போர்டு காயினை சுண்டி விடுவது போல சுண்டி விடணும் சார். கையால் பிச்சா அதன் வயிற்றில் இருக்கும் பாக்டீரியா நம்ம ரத்தத்தில் கலந்து நமக்கு தேவையில்லாத வியாதிகளை கொடுக்கும் சார்"

"முடிஞ்ச அளவு எல்லாரும் திரும்பி வரும்போது தீவிரமா தேடனும் சார் ஒரு சிறிய பாலித்தீன் கூட மேலே இல்லாம பொறுக்கிட்டு வந்துடணும் சார்"

இப்படியெல்லாம் இயற்கையை காப்பாற்ற அதன் சுவடு மாறாமல் இருக்க வைக்க எங்கள் குழுவில் என்னோடு பயணித்த என்னுடைய ஜிம் மேட் இயற்கை ஆர்வலர் டாக்டர் இளங்கோவன் ட்ரெக்கிங் ஆரம்பிக்கும் முன் ஆற்றிய உரையின் ஹைலைட் தான் நான் மேலே சொன்னது.






ரயில் ரத்தாகி விட்ட விஷயம் தெரிந்தவுடன் குமரேசன் என்னுடன் தொடர்பு கொண்டு "அண்ணா என்ன செய்யலாம்?" என்று கேட்க "விடிந்தவுடன் மங்களூருக்கு ஒரு இன்டர்சிட்டி ரயில் இருக்கிறது அதில் வேண்டுமானால் எல்லோருக்கும் டிக்கட் இருக்கிறது அதில் போகலாமா? " என்று கேட்டேன். குழுத்தலைவர் ராஜீவிடம் கலந்து பேசி விட்டு வருகிறேன் என்று சொன்னவர் ஐந்து நிமிடத்தில் மீண்டும் தொடர்பு கொண்டார்.

"கேப்டன் சரி என்று சொல்லி விட்டார்" என்று சொல்லவும் ஆன்லைனில் எல்லோருக்கும் டிக்கட் போட்டு வாட்சப்பிலும் செய்தி பரப்பியாச்சு எல்லோரையும் மறுநாள் காலை புறப்பட சொல்லி.

வாட்சப்பின் வேகம் பலம் எல்லோரிடம் இருந்தும் ஓகே என்று மெஸ்சேஜ் வரவும் நிம்மதியான தூங்கினோம் அன்று இரவு.

மறுநாள் காலை மங்களூர் சென்ட்ரல் சென்று அங்கிருந்து குக்கே சுப்பிரமணியாவிற்க்கு கர்நாடகா அரசு பேருந்தில் ஏறி மாலை சென்று சேர்ந்தோம். மங்களூரில் இருந்து பாசஞ்சர் ரயில் இருக்கிறது. காலை அங்கே சென்று சேர்ந்திருந்தால் பிடித்திருக்கலாம். குழப்பத்தில் பிடிக்க முடியவில்லை. பேருந்தில் பயணிப்பதை விட குக்கே சுப்பிரமணியாவிற்கு ரயிலில் பயணிப்பது நல்லது.


பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து நிமிட நடை பயணத்தில் எங்களுடைய தங்கும் விடுதி அனுகிரகா லாட்ஜ் இருந்தது. நடுத்தர வர்க்கம் தங்குவதற்கான அருமையான விடுதி. சுத்தமாக இருந்தது.

அருகில் இருந்த கோவிலில் எல்லோரும் சென்று தரிசனம் செய்த பின் இரவு உணவு உண்டு காலை பயணம் புறப்பட தயாரானோம்.

காலை பயணம் புறப்படும் முன் ஒரு சிறிய அறிமுக மீட்டிங் வைத்து கொள்வோம் என்று கேப்டன் சொல்லி விட்டார். அனைவரும் கூடியவுடன் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம். பிறகு ஒவ்வொருவரும் அவர்களுடைய எண்ணங்களை சிறிது நேரம் பேசியவுடன் கூட்டம் கலைந்தது.

மறுநாள் காலை பயணம் தொடங்கும் உற்சாகத்தில் மெல்ல உறங்க ஆரம்பித்தோம்.

குறிஞ்சி மலர்கள் 

அடர்ந்த காடுகளுக்குள் அல்லது மலைமீது ஏறும்போது எப்படி அங்கே இருக்கும் பாலிதீன் கழிவுகளை எடுத்து வந்து விடவேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் நினைக்கிறோமோ அதே போன்று நமக்கு அளவில்லாமல் கொடுக்கும் இயற்கைக்கு நாமும் சிலவற்றை அங்கே கொண்டுபோய் போட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருக்க வேண்டும்.

நாம் அன்றாடம் வாங்கும் நெல்லிக்காய், பலாப்பழங்களின் கொட்டைகள், நாவல் பழங்களின் கொட்டைகளை பத்திரபடுத்தி வைத்துகொண்டு இதுபோன்ற பயண சமயத்தில் நடந்து செல்லும் போது கரைகளில் வீசி செல்லலாம். நூறு விதைகள் வீசினால் குறைந்தது ஒரு இருபது பழமரங்கள் தழைத்தோங்கும் அங்கே வசிக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அந்த மரங்களின் பழங்கள் உணவாகும் என்ற சிந்தனையோடு அடுத்த எபிசோடுக்கு போவோம்.

மாலையில் சூரியன் மறையும் அழகிய காட்சி 
மறுநாள் சூரியன் உதிக்கிறான் 

 காலை பயணம் ஊறவைத்த நிலக்கடலையும் அச்சுவெல்லத்துடனும் ஆரம்பமாகியது. காலை 8.10 மணிக்கு புஷ்பகிரி என்றழைக்கபடும் குமாரபர்வதத்தின் வன எல்லையில் பயணம் ஆரம்பமாகியது. மொத்தம் இருப்பவர்களை மூன்று குழுக்களாக பிரித்து சிறிது இடைவெளி விட்டு செல்லுமாறு அனுப்பினார் எங்கள் கேப்டன். வழியெங்கும் அடர்ந்த காடுகள் வானுயர்ந்த மரங்கள் என்று காடு அமைதியாக எங்களை வரவேற்றது.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் துரோனாச்சரியரிடம் வில்வித்தை கற்றபோது ஒவ்வொருவரிடமும் அம்பை நாணில் பூட்டசொல்லி மரத்தை காட்டி அங்கே என்ன தெரிகிறது என்று குரு கேட்பாராம். அப்போது யுதிஷ்டன் மரத்தின் கிளை தெரிகிறது என்றும் பீமன் வானம் தெரிகிறது என்றும் சொல்வார்களாம். அர்ஜுனன் மட்டும் மரத்தின் கிளை ஒன்றில் ஒரு கிளி இருக்கிறது அதன் கழுத்து தெரிகிறது என்று சொல்வானாம். அப்படி எங்களுக்கு வானுயர்ந்த மரங்கள் அழகிய மலை தெரிந்தால் எங்களுடன் வந்த அரவிந்த் அமிர்தராஜ்க்கு மரங்களின் ஊடே கிளைகளில் கண்ணுக்கு தெரியாத அழகான பறவைகள் தெரிந்திருக்கின்றன.

அவைகளை படம் எடுப்பதோடு இல்லாமல் அவைகளின் பெயர்களையும் அருமையாக குறிப்பிட்டது இனிமையானதொரு அனுபவம்.

பிரதீப்பும் விஜயும்
மதியம் பட்டர்மனே என்ற இடத்தில் நாம் தங்க வேண்டும் என்று கேப்டன் ராஜீவ் அறிவுருத்தியிருந்ததார். அடிவாரத்தில் இருந்து ஒரு எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அந்த இடம். அங்கே சென்று அன்று இரவு தங்குவதற்கான டெண்ட்டுகள் அடிப்பது என்று வேலை ஆரம்பமாகியது.

பட்டர்மனே என்ற இடத்தில் ஒரே ஒரு குருக்கள் வீடுகட்டி மலையேறும் ட்ரெக்கர்களுக்கு உணவு சமைத்து வாழ்வை கழிக்கிறார். இரவில் வன விலங்குகள் வீட்டிற்குள் வந்து விடாவண்ணம் சுற்றிலும் அகழி, வெளிச்சத்துக்கு சோலார் பேனல்கள் என்று மனிதர் கலக்குகிறார். டிஷ் டிவி ஒன்றும் வைத்து பொழுதை போக்குகிறார். நமக்கு உணவு வேண்டும் என்றால் அவருடைய அண்ணன் ஒருவர் மங்களூரில் இருக்கிறார் அவரிடம் தொலைபேசியில் சொல்லிவிட்டால் முன்னூறு பேர் சென்றாலும் உணவு தயாராக இருக்கிறது.

குமாரபர்வதத்தின் வன அலுவலகம் ஒன்றும் அங்கே இருக்கிறது. அங்கிருந்து மலை உச்சிக்கு செல்ல வன அலுவலகத்தில் பணம் செலுத்தி டோக்கன் வாங்க வேண்டும்.

மதியம் மற்றும் இரவு உணவு இரண்டுமே சாதம் சாம்பார் ஊறுகாய் மற்றும் மோர் மட்டுமே அங்கே கிடைக்கும். இப்படி மலையேறும் போது வாய்க்கு ரொம்ப ருசியாக உணவு கிடைக்கும் என்று கனவு எல்லாம் காணக்கூடாது.

மாலைப்பொழுதை பட்டர்மனே வியூ பாயின்ட்டில் அமர்ந்து போட்டோ எடுப்பது சூரியன் மறைவதை ரசிப்பது என்று கழித்து விட்டு இரவு உணவு உண்ண அந்த குருக்களின் வீட்டுக்கு சென்று உணவு உண்டபின் டெண்டுக்கு திரும்பி இளைஞர் பட்டாளங்கள் பேசிகொண்டிருக்க மற்றவர்கள் எல்லோரும் டெண்டுக்குள் படுத்து நிம்மதியாக உறங்க ஆரம்பித்தோம்.

அப்போது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை நாளை காலை மலையேறும் போது அப்படி ஒன்று நடக்கும் என்று....


சிறகுகள் வேண்டும் பறக்க - ஸ்ரீநிவாஸ் ராவ் குமரேசனுடன் 


இரவு என்று சொல்லனுமா அல்லது அதிகாலை என்று சொல்லணுமான்னு தெரியல 2.00 மணி இருக்கும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது டம் டம் டம் டம் என்று டென்டின் மேல் பரப்பில் இருந்து சத்தம் கேட்டது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விளித்து கொண்டதால் அநியாயத்துக்கு ஸ்டீவன் ஸ்பீல்பர்க் ஜுராசிக் பார்க் படத்தில் காருக்குள் இருக்கும் மனிதர்களை புரட்டி போடுமே டைனோசர் அப்படி ஏதாவது மிருகம் வந்து விட்டதோ ? என்று மனது அலைபாய தொடங்கி விட்டது.
"சார் நீங்களாச்சு நல்லா தூங்கிட்டீங்க ஆனா நான் ஒரு பொட்டு தூங்கல சார்" என்னுடைய கோ ட்ரெக்கர் இளங்கோவன். அருகில் படுத்திருந்தார்.
"என்ன சார் சத்தம் வெளியே போய் பார்க்கலாமா"



ஒருவழியாக கொஞ்சம் மனதை திடப்படுத்தி கொண்டு டென்டின் ஜிப்பை திறந்து வெளியே வந்து பார்த்தோம். சுற்றிலும் இருந்த மற்ற டெண்டுகள் அமைதியாக இருந்தது. காற்றின் வேகம் தாங்காமல் ஆணி ஒன்று கழன்று டென்ட் வேகமாக ஆடிக்கொண்டிருந்தது. அந்த ஆணி கயிற்றின் நுனியில் இருந்து டெண்ட்டை தட்டி தட்டி எழுப்பி இருக்க வேண்டும். அதற்குள் ஆயிரம் கற்பனை.

மீண்டும் ஒரு கல்லை எடுத்து ஆணியை நன்றாக அடித்து விட்டு டெண்ட்டின் உள்ளே சென்று சிறிது உறக்கம் பிடித்தது இப்போது காற்றும் வேகம் மேலும் கூடியிருந்தது. தொடர்ந்து டென்ட் ஆடிக்கொண்டே இருந்தது. மணி அதிகாலை 4.00 இருக்கும். அருகில் இருந்த வன அலுவலகத்தில் ஒரே ஒரு டாய்லட் மட்டுமே இருந்தது. இப்போது எழுந்தால் தான் வரிசையில் நிற்காமல் காலைக்கடனை முடிக்க முடியும் என்று எழுந்து சென்று காலைக்கடனை முடித்து தண்ணீரில் குளிக்கலாம் என்று கை வைத்தால் தண்ணீர் உறைநிலைக்கு கொஞ்சம் மேலே இருந்தது.

குளிப்பது ஊசிதமில்லை என்று கைகால் முகம் கழுவி வெளியே வந்தவுடன் பார்த்தால் ஒரு மிகபெரிய வரிசை நின்றுகொண்டிருந்தது... அடுத்தடுத்து உள்ளே செல்ல. தப்பிச்சோம்டா கைப்புள்ள என்று மனதுக்குள் நினைத்துகொண்டு பயணத்திற்கு தேவையான பொருட்களை மட்டும் எடுத்துகொண்டு ட்ரெக்கிங் பேக்கை ரெடி செய்து விட்டேன். மீதமிருந்த டீ ஷர்ட், போர்வை போன்றவற்றை டெண்டுக்குள் வைத்து அப்படியே விட்டு விட்டு செல்வது என்று முடிவு செய்திருந்தோம். மாலை எப்படியும் இங்கே தான் திரும்பி வர வேண்டும்.


ஒரு பத்து பேர் ரெடியானவுடன் கேப்டன் புறப்படுங்கள் என்று சொல்லிவிட்டார். ரெடியானவர்கள் மட்டும் வன அலுவலகத்தின் எதிரே தெரிந்த குமாரபர்வதா பாதையில் அடுத்த மலையான சேஷ பர்வதத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

அதிகாலையில் என்பதால் நடப்பதற்கு குளுமையாக மலை இருந்தது. சூரியன் இன்னும் எட்டிபார்க்கவில்லை. ஆனால் வெளிச்சம் மட்டும் வந்திருந்தது.

காற்று மட்டும் சற்று வேகமாக வீசிகொண்டிருந்தது. ஒரு இரண்டு கிலோ மீட்டர் மட்டுமே தாண்டி இருப்போம். காற்று பேயாட்டம் ஆட ஆரம்பித்து விட்டது.

பஞ்ச பூதங்கள் என்று இயற்கையின் நிலம் காற்று ஆகாயம் நீர் நெருப்புக்கு நம் முன்னோர்கள் எதற்க்காக பெயர் சூட்டினார்கள் என்பதற்கான அர்த்தம் அன்று எனக்கு புரிந்தது.

சென்னையில் வெள்ளம் புரட்டி போட்ட விஷயம் தெரியவில்லை அப்போது. அங்கே ஒரு பூதம் பேயாட்டம் ஆடியது என்றால் நாங்கள் சென்று இடத்தில் மற்றொரு பூதமான காற்று சுழற்றி சுழற்றி அடித்து கொண்டிருந்தது.

இரவு கேம்ப் பையர்


நடப்பது என்பது நடக்காத காரியமாக இருந்தது. எங்களுடன் வந்த டாக்டர் இளங்கோவனின் தொப்பியை காற்று தூக்கி சென்று விட்டது. எங்கேயோ சென்று விட்டு மறுபடியும் எங்கள் அருகிலேயே பாவம் என்று போட்டு விட்டு சென்று விட்டது.

மிகவும் குறுகலான மலைப்பாதையில் இரண்டு புறமும் பள்ளம் அங்கே எல்லாம் ஒருவரை ஒருவர் கை கோர்த்து மனித பாலம் அமைத்து கடந்து செல்ல வேண்டியதாகி விட்டது.

காலை உணவு உன்ன கல்மண்டபம் என்ற இடத்தில் காத்திருக்குமாறு கேப்டன் சொல்லி விட்டார். அதற்க்கு ஒரு நான்கு கிலோ மீட்டர் கடந்து செல்ல வேண்டும்.

அங்கே காத்திருந்தபோதும் காற்றின் வேகம் குறைந்த பாடில்லை. ஆள் இடுப்பு அளவு வளர்ந்திருந்த புற்கள் பிரபு தேவா போன்று உடம்பில் எலும்பில்லாமல் ஆடிகொண்டிருந்தன. மேலிருந்து பார்ப்பதற்கு அந்த காட்சி ஆனந்தமாக இருந்தது. மலையே நடனமாடுவது போன்று இருந்தது.

அரவிந்த் அமிர்தராஜ்,
வைல்ட் லைப் போட்டோகிராபர், சென்னை 

ஒருவழியாக மொத்த குழுவினரும் வந்த பின் எங்களுக்காக இனிப்பு அவலை சுமந்து வந்திருந்தார் பத்மஸ்ரீ விஜயகுமார். இயற்கையை பாழ்படுத்த கூடாது என்று எல்லோரும் அவரவர் ஒரு தட்டு எடுத்து வரவேண்டும் என்று சொல்லி இருந்தார் கேப்டன். எங்களுடைய தட்டில் அவல் ஆளுக்கு ஒரு பெரிய கரண்டியில் வைத்து பரிமாறப்பட்டது.

மீண்டும் உடலில் வலு சேர்ந்து கொண்டது. டாக்டர் இளங்கோவன் வாருங்கள் நாம் செல்லலாம் என்று அடுத்து சேஷ பர்வத மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

சேஷ பர்வதம் செங்குத்தாக இருந்தது. பாறைகள் பிடிமானம் இல்லாமல் சரள் கற்களாக இருந்தது. நடப்பதற்கு சிரமமாக இருந்தது.

ஒருவழியாக சேஷ பர்வதம் ஏறி முடித்தவுடன் சேஷ பர்வதத்திற்கும் குமாரபர்வதத்திற்கும் இடையில் குறுகிய பாதை மட்டுமே இருந்தது. இரண்டு புறமும் கண்ணுக்கு தெரியாத தூரம் ஆழமாக இருந்தது.


அந்த இடத்தை கடந்து செல்வது பியர் கிரிஸ் போன்ற நிபுணர்களால் மட்டுமே எளிதில் முடியும். காற்று வலதுபுறம் ஒரு பெரிய சமவெளியில் இருந்து மேல் நோக்கி வீசியதில் ஒத்தையடி பாதையில் நடந்து சென்ற என்னை அப்படியே தள்ளி விட்டு விட்டது. இடது புறம் மிகபெரிய மிகபெரிய டிலோ...

சென்னையில் முப்பதாயிரம் கன அடி தண்ணீர் என்றால் என்ன என்பதற்கு ஒருத்தர் விளக்கம் கொடுத்திருந்தார். நம்மை போன்று 250 பேரை அப்படியே அலாக்காக தூக்கி சென்று விடும் வேகம் அதற்க்கு இருக்குமாம்.

அந்த சமவெளியில் இருந்து வீசிய காற்றும் அப்படித்தான் என்னை அப்படியே தூக்கி வீசிவிட்டது அருகில் இருந்த பள்ளத்தை நோக்கி...
ஒரு நிமிடம் மரணம் கண் முன்னே தெரிந்தது...

சென்னையில் முப்பதாயிரம் கன அடி தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்தால் அதன் வேகம் என்ன என்பதற்கு ஒருத்தர் விளக்கம் கொடுத்திருந்தார். நம்மை போன்று 250 பேரை அப்படியே அலாக்காக தூக்கி சென்று விடும் வேகம் அதற்க்கு இருக்குமாம்.

அந்த சமவெளியில் இருந்து வீசிய காற்றும் அப்படித்தான் என்னை அப்படியே தூக்கி வீசிவிட்டது அருகில் இருந்த பள்ளத்தை நோக்கி...

ஒரு நிமிடம் மரணம் கண் முன்னே தெரிந்தது...

திடீரென்று பின்னால் இருந்து ஒரு கை என்னுடைய டிரவுசரை பிடித்து இழுத்தது. மறுபடியும் என்னை ஒத்தையடி நடை பாதையில் இழுத்து நிறுத்தி விட்டது. திரும்பி பார்த்தால் கதிர் என்ற அந்த இளைஞன் அங்கே நின்று கொண்டிருந்தான்.

என்னுடைய எடையில் பாதி அளவுதான் இருப்பான் அந்த இளைஞன் அவனுக்குள் அவ்வளவு வேகம் எப்படி வந்தது என்று ஆச்சரியமாக இருந்தது. சவாலான நேரங்களில் மட்டுமே நம்மில் வெளிப்படும் அப்படி ஒரு வேகம்.


மறுபடியும் நடந்து சென்று சேஷ பர்வத மலை உச்சிக்கு சென்றால் தூரத்தில் ஒரு கொடி தெரிகிறதே அதுதான் குமார பர்வதம் என்று அடுத்த மலையை காட்டினார்கள் நண்பர்கள். சிறிது ஓய்வுக்கு பிறகு சேஷ பர்வதத்தை விட்டு கீழே இறங்கினோம்.

கீழே அடர்ந்த வனம் இருந்ததால் காற்றின் வேகத்தை அது மட்டுபடுத்தியிருந்தது. வழியில் சுனை ஒன்று இருந்தது. தண்ணீர் தேனாக இனித்தது. காடுகள் கடந்த பின் மீண்டும் செங்குத்தாக பாறை மட்டுமே இருந்தது. வழி கண்டு பிடிப்பது சிரமமாக இருந்தது.

குமாரபர்வத மலை உச்சியில்  இருக்கும்  கோவிலின்  அழகிய  தோற்றம் 


எப்படியோ தவழ்ந்து மேலே ஏறி சென்றால் அழகாக குறிஞ்சி மலர்கள் எங்களை அன்பாக வரவேற்றது. சிறிது தூரத்தில் மனிதர்கள் சென்றதற்கு அடையாளம் கல்குவியல் ஒன்று இருந்தது. அதை தாண்டி கோவில் தெரிந்தது. கொடியும் பறந்தது. குமாரபர்வதம் சிகரம் தொட்டாச்சு. உற்சாகமாக இருந்தது.

அங்கே இயற்கையாக இருந்த கற்களை வைத்து குகை போன்ற அமைப்பில் மூன்று கோவில்கள் அமைத்திருந்தனர். இடது புறம் சிவனுக்கும் வலது புறம் இருந்தது பார்வதி அம்மனுக்கும் நடுவில் முருகன் வள்ளி தெய்வயானை சிலைகளாக வடிக்காமல் அங்கே கிடைத்த கற்களையே வைத்து கோவில் அமைத்திருந்தனர்.

சிவன் கோவில் 
சிறிது நேரம் கண்களை மூடி எல்லோரும் தியானத்தில் ஈடுபட்டோம். அருமையாக இருந்தது அந்த இடமும் பருவ நிலையம்.

இது போன்ற மலை சிகரங்களுக்கு செல்லும் போது பருவ நிலை மாற்றம் எப்படி வேண்டுமானாலும் நிகழலாம். நிமிடத்திற்கு நிமிடம் நொடிக்கு நொடி திடீரென்று மாறிவிடுகிறது. கீழே கிளம்பும் போது வெயில் தானே அடிக்கிறது என்று அசட்டையாக மலை ஏற கூடாது. ரெயின் கோட், ஸ்வெட்டர் என்று அனைத்தும் வேண்டும் என்று எங்கள் கேப்டன் சொல்லியிருந்தார்.

இந்த மலைக்கு எங்கள் குழுவில் இருந்து சென்ற முறை சென்றிருந்த தோழர்கள் மலை சிகரத்தில் டென்ட் அடித்து தங்கி இருக்கிறார்கள். நடு இரவில் வானம் பொத்துக்கொண்டு ஊற்றி இருக்கிறது. டெண்டுகளுக்குள் எல்லாம் தண்ணீர் வந்து விட்டதாம்.

டெண்டுகளை கழற்ற கூட நேரமில்லாமல் அப்படியே போட்டுவிட்டு கீழே இறங்கி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து விட்டார்கள். இயற்கை அவ்வளவு வலியது. அதனால் இந்த முறை பட்டர்மனே என்ற இடத்திலேயே கூடாரம் அமைத்து தங்க முடிவு செய்து விட்டார்கள்.

வனத்தில் பெரிய அறிவிப்பு பலகை ஒன்றும் வைத்திருக்கிறார்கள் சிகரத்தில் தங்க அனுமதி இல்லை என்று.

சேஷபர்வதத்தின்  அழகிய  தோற்றம் 

முருகன் வள்ளி தெய்வயானை 
 எல்லோரும் வந்து சேர்ந்த பிறகு மதிய உணவு நாங்கள் கொண்டு சென்ற டிப்பன் பாக்ஸ்களில் இருந்து எடுத்து உண்ண ஆரம்பித்தோம். எங்கள் கேப்டன் உணவை கட்டாயம் டிப்பன் பாக்ஸில் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். மாற்று வழிகளில் எடுத்து சென்றால் சிகரம் குப்பையாகி விடும் என்று அறிவுரை வழங்கி இருந்தார். நல்ல அறிவுரை.

சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மலை இறங்க ஆரம்பித்தோம். என்னுடன் வந்த டாக்டர்கள் இளங்கோவன் மற்றும் மதன் என்னிடம் இருந்த அரிசி சாக்கு நிறையும் அளவு திரும்பி வரும் வழியில் எல்லாம் பாலித்தீன் பைகள் கோக் பெப்சி வாட்டர் பாட்டில்கள் என்று எடுத்து நிறைத்து விட்டனர்.

ஏறும் போது இருந்த காற்று காணாமல் போயிருந்தது. சீக்கிரமே பட்டர்மனே வந்து சேர்ந்து விட்டோம். மற்றவர்களும் வந்து சேரும் போது கிட்டத்தட்ட இருட்டி விட்டது.

நாங்கள் மலையை விட்டு இறங்கும் போது சிலர் ஏறிக்கொண்டிருந்தனர். திரும்பி வர உங்களிடம் விளக்கு இருக்கிறதா என்று நான் கேட்க தலையாட்டி விட்டு போனான் அந்த இளைஞன்.

ஆனால் திரும்பி வரவில்லை. அவனுடன் வந்த பெண்கள் இருவர் கீழே வன அலுவலகம் முன் அழுது கொண்டு நின்றிருந்தனர்.

அந்த இருவரையும் வன அலுவலர்கள் இருவர் சென்று மீட்டு வந்தனர்.

இது போன்ற சிகரங்களை பகலில் மட்டுமே ஏற வேண்டும் இறங்க வேண்டும். அதற்கான சரியான திட்டமிடல் இருக்க வேண்டும் இல்லையென்றால் திரும்பி வீடு சென்று சேர்வது சிரமம் தான்.

அன்று இரவு ஆனந்தமாக பொழுது போனது. கேம்ப் பையர் போட்டு அனைவரும் சுற்றி அமர்ந்து பாடுவது ஜோக் சொல்லுவது என்று அசத்தினோம். சிறிது நேரத்தில் ஒரே ஒரு குருக்கள் வீட்டுக்கு சென்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு அசதியில் அப்படியே உறங்கி போனோம்.

திடீரென்று கண் விளித்து பார்த்தால் மணி அதிகாலை 4.00. சரி நேற்று குளிக்க வில்லை. இன்று எப்படியும் குளித்து விட வேண்டும் இது தான் சரியான சமயம் என்று வன அலுவலகத்தில் இருக்கும் குளியல் அறையில் குளித்து விட்டு வெளியே வந்தால் மறுபடியும் மிகப்பெரிய வரிசை.

எல்லோரும் எழுந்து விட்டனர். கேப்டன் ராஜீவ் எல்லா டெண்டுகளையும் கழற்றி அருமையாக பேக் செய்து வைத்திருந்தார். ரெடியானவர்கள் அப்படியே ஆளுக்கொரு டெண்ட்டை எடுத்து கொண்டு கீழே இறங்குங்கள் நாம் மீண்டும் அடிவாரத்தில் சந்திப்போம் என்று சொல்லிவிட்டார்.

நாங்கள் மறுபடியும் குழுக்களாக கீழே இறங்க ஆரம்பித்து விட்டோம். அடிவாரம் வந்தவுடன் மதியம் 1.30 மணிக்கு ஒரு ரயில் இருக்கிறது அது மங்களூருக்கு நாலு மணிக்கு சென்று விடும் என்று சொன்னார் கேப்டன். 4.40 மணிக்கு புத்துச்சேரி எக்ஸ்பிரெஸ் ரயிலில் எல்லோருக்கும் முன் பதிவு செய்யபட்டிருந்தது.

பாசஞ்சர் ரயில் சரியாக 4.00 மணிக்கு மங்களூர் சென்று சேர்ந்து விட்டது. கீழே இறங்கினால் சென்னை செல்லும் எல்லா ரயில்களும் ரத்து என்று அறிவிப்பு வருகிறது. புதுச்சேரி எக்ஸ்பிரஸ் மங்களூர் ஜன்க்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து 4.15 மணிக்கு புறப்படும் என்று மைக்கில் சொன்னார்கள்.

நாங்கள் இருக்கும் மங்களூர் சென்ட்ரலில் இருந்து அந்த ஸ்டேசன் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அங்கே 15 நிமிடத்தில் எல்லாம் சென்று சேர்வது நடக்காத விஷயம் என்று தோன்றியது.

இன்பர்மேசன் கவுண்டரில் கேட்டால் அந்த ட்ரெயின் இந்நேரம் புறப்பட்டு போயிருக்குமே. நாங்க மத்தியானம் இருந்தே அனவுன்ஸ் பண்ணுறோம் என்று சொன்னார் அங்கிருந்தவர்.

மறுபடியும் பரபரப்பு பற்றி கொண்டது எல்லோரிடத்திலும்.

கேப்டன் வாருங்கள் நாம் ஸ்டேசன் மாஸ்டரிடம் சென்று பேசுவோம் என்று என்னை கூட்டி போனார்.

எங்களை பார்த்தவுடன் ஸ்டேசன் மாஸ்டர்

"என்ன வேண்டும் ?"

"சார் நாங்கள் 29 பேர் கன்பார்ம் டிக்கட் புதுச்சேரி எக்ஸ்பிரஸ்சில் ஆன்லைன் டிக்கட் போட்டிருந்தோம் எங்களுக்கு அட்லீஸ் ஒரு எஸ்எம்எஸ் கூட வரவில்லை" நாங்கள்

அவர் "கொஞ்சம் வேய்ட் பண்ணுங்க" என்று சொல்லி ஹாட் லைனை எடுத்து பேச ஆரம்பித்தார்

"ஹல்லோ இவிட ஒரு 29 டிரேக்கர்ஸ் எத்திட்டுண்டு ட்ரைன் ஒரிஜின் சேன்ஜ் மெச்செஜ் அவருக்கு எத்திட்டில்லா "

என்று எதிர் ஸ்டேசன் மாஸ்டரிடம் பேசி ஒருவழியாக ஒரு முடிவுக்கு வந்து பிறகு எங்களை அழைத்தார்

"நீங்கள் இன்னும் பத்து நிமிடத்தில் இங்க இருந்து கண்நூருக்கு ஒரு பாசஞ்சர் ரயில் கிளம்பும் அதில் புறப்பட்டு உள்ளால் என்று ஒரு ஸ்டேசன் இருக்கு இங்கே இருந்து இரண்டாவது ஸ்டேசன் அங்க இறங்குங்க அங்கே புதுச்சேரி எக்ஸ்பிரஸ் வரும் அங்கே அந்த ரயில் நிக்காது ஆனால் உங்களுக்காக நிற்க சொல்லுகிறேன்" என்று சொன்னது காதில் தேனாக பாய்ந்தது.

வாழ்வில் முதல் முறையாக நமக்காக ரயில் நிற்க போகிறது என்பதில் ஒரு திரில்லுடன் பாசஞ்சர் ரயிலில் ஏறி உள்ளாலுக்கு பயணமானோம்.

உள்ளாலில் இறங்கியவுடன் அங்கே கொடியுடன் நின்று கொண்டிருந்த ஸ்டேசன் மாஸ்டரிடம்

"புதுச்சேரி எக்ஸ்பிரஸ் எந்த பிளாட் போர்மில் வரும்" என்று கேட்க அவர்

"வழக்கமா அது இங்கே நிக்காது ஆனா இன்னைக்கு உங்களுக்காக நிறுத்த சொல்லி ஆர்டர் வந்திருக்கு எதிரே போய் நில்லுங்க" என்று சொன்னார்

அப்படா வழக்கமா மந்திரிகளுக்கும் எம்பிக்களுக்கும் மட்டுமே தாமதமாக ரயில் நின்று செல்லும் என்று கேள்வி பட்டிருக்கிறேன் முதல் முறையாக எங்களை போன்ற பாமரர்களுக்காக தென்னக ரயில்வே ஒரு ரயிலை நிறுத்தி ஏற்றி சென்றதை நான் கேள்வி பட்டதில்லை.

மறுபுறம் சென்று ஏறியதும் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் வந்து கிரீச் என்ற சத்தத்துடன் நின்றது. ரயிலில் ஏறி அவரவர் இடத்தை பிடித்து அடுத்த ஸ்டேசனில் ஒரு பொட்டலம் சப்பாத்தியும் வெஜ் பிரியாணியும் உண்டுவிட்டு சிறிது நேரம் நண்பர்களுடன் பேசி பாடி பொழுதை கழித்து சிறிது நேரத்தில் உறங்கி போனேன்.

ரயில் சத்தம் டக் டக் டக் டக் என்று சீரான இடைவெளியில் கேட்டு கொண்டே இருந்தது.
smile emoticon
smile emoticon
மீண்டும் அடுத்த மலையேற்றத்தில் சந்திப்போம்


புகைப்படங்கள் உதவி  : அரவிந்த் அமிர்தராஜ், நரசிம்மன் (கோவை ட்ரேக்கர்ஸ்), 

டிவைன் ட்ரெக்கர்ஸ் 

smile emoticon
smile emoticon

Thursday, 17 September 2015

எழில்மிகு கொங்கு மண்டலம்


கடினமான உழைப்பில் இருந்து ஒரு சிறிய ஓய்வு வேண்டும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக  இருக்க வேண்டும். செல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு எங்காவது ஒருநாள் எந்த சிந்தனையும் இல்லாமல் மகிழ்வுடன் இருக்க வேண்டும்.

உழைத்து உழைத்து களைத்து திடீரெண்டு ஒருநாள் இப்படி நம் எல்லோருக்கும் தோன்றும். நகர மயமாக்கலின் தாக்கம் எங்கு திரும்பினாலும் புகை மாயம், வாகனங்களின் ஓசை, போக்குவரத்து நெரிசல் என்று நகரில் சுற்றி வரும் போது கூட நமக்கு ஒரு நிம்மதி கிடைப்பதில்லை. வியாபாரம் நம்முள் ஏற்றி விட்ட ரத்த அழுத்தம் நகரில் அமைதியாக இருக்கலாம் என்றால் அதற்கு வாய்ப்பில்லாமல் செய்து விடுகிறது. இன்று நவீன மயமாகி விட்ட ஷாப்பிங் மால்களுக்கு சென்றாலும் தியேட்டர்களுக்கு போனாலும் மனதளவில் நிறைவு என்பது இல்லாமலேயே இருக்கிறது.

தமிழகத்தில் கொங்கு மண்டலம் என்று அழைக்கபடும் கோவையும் அதனை சுற்றிலும் உல்லாசமாக பொழுதை போக்க மன அழுத்தத்தை குறைக்க இயற்கையோடு ஒன்றி சில நாட்கள் வாழ மனித சஞ்சாரம் குறைந்த பல அருமையான இடங்கள் இருக்கின்றன. காலை முதல் வாகன சத்தமில்லாமல் அருவிகளின் ஓசை பறவைகளின் ஒலி என்று அமைதி பூங்காக்கள் நிறைய இருக்கின்றன. உங்களுக்காக ஒரு சில இடங்களை இப்போது பார்க்கலாம்.

கோவை குற்றாலம்


மேற்கு தொடர்ச்சி மலையின் எழில்மிகு வனப்புக்கு கூடுதல் சிறப்பு சேர்க்க ஒரு  சிற்றருவியுடன் சிறுவாணியின் கிளை நதி ஒன்று ஓடி வருகிறது. இங்கே ஒரு நாள் காலை முதல் மாலை வரை செலவிட அருமையான இடம். கோவியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் இருக்கிறது. இங்கே செல்ல கோவை காந்திபுரத்தில் இருந்து பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.



வனத்துறையால் அமைக்க பட்டுள்ள தொங்கும் பாலம் 
மலை அடிவாரம் சென்று செர்ந்துவிட்டால்  அங்கிருந்து வன இலாக்கா அவர்களின் வாகனத்தில் நம்மை அழைத்து செல்கிறார்கள். முன்பெல்லாம் அருவி இருக்கும் இடம் வரை நடந்து செல்லவும் அவரவர்கள் கொண்டுவரும் வாகனத்தில் செல்லவும் அனுமதிக்க பட்டிருந்தனர். சில விசமிகளின் பொறுப்பற்ற செயல்களால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படவே இப்போதெல்லாம் வன இலாக்காவின் கண்காணிப்பில் மட்டுமே செல்ல முடிகிறது.
எழில் மிகு கோவை குற்றால அருவி  மற்றும் குளம் 

காட்டின் நடுவே ஒரு அருமையான நீர்வீழ்ச்சி அதன் கீழ் புறம்  குளிப்பதற்கு அருமையான குளம் என்று இயற்கை வனப்புடன் இங்கே இருக்கிறது. வன விலங்குகளிடம்  இருந்து நம்ம பாதுகாத்து கொள்ள தொங்கும் பாலம் ஒன்றையும் வன இலாகா அமைத்துள்ளது. அருமையான சுற்றுலா தலம். ஒருநாள் சுற்றுலா சென்று வரலாம்.

எழில் கொஞ்சும்  பொள்ளாச்சி

புல்லாட்சி (நெல்லின் ஆட்சி) என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டு இருக்க வேண்டும் இது ஒரு கோவையின் துணை நகரம் (Satlite Town).  கோவையில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சிறு நகரகம் ஒரு வயலும் வயல் சார்ந்த இடம் என்று சொல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் இந்த நகரத்தை செழிப்பாக்கி விட்டு செல்கிறது. உலகுக்கு  தென்னை பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவின் முன்னணி நகரமாக பொள்ளாச்சி திகழ்கிறது.

ரெசார்ட்டுகளின் அருகில் ஓடும் அம்பரா ஆறு 
இங்கே இருக்கும் ரிவர் சைட் ரெசார்டுகள்  வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை நாட்களை இன்பமாக செலவிட ஏற்ற அருமையான இடங்களாக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி  ஆகும்  ஆறுகளின் ஓரம் அமைந்துள்ள ரெசார்டுகளில்  தங்கவும்  பொழுது  போக்கவும்  எந்த இடையூறுகளும் இல்லாமல் இருக்கிறது. பகல் நேரங்களில் இயற்கையான சூழலில்  ஆறுகளில் குளிக்கலாம், மற்ற நேரங்களில் தங்கும் இடத்தில் குளிக்க  நீச்சல் குளங்களும் அமைத்திருக்கிறார்கள். நமக்கு என்ன  உணவு  வேண்டுமோ அந்த  உணவை  அருமையாக  சமைத்து  தருகிறார்கள். இங்கே இரண்டு மூன்று நாட்கள் வரை நேரம் போவதே தெரியாது. குடும்பத்துடன் செல்ல ஏற்றது.


வாடிக்கையாளர்களை கவர அழகிய செயற்கை குளம் 

டாப் ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு

கோவையில் இருந்து 78 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது டாப்ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வனம். பரம்பிக்குளம் கேரளா வன துறையாலும் டாப்ஸ்லிப்  தமிழக வன துறையாலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பரம்பிகுளத்தில் அட்வான்ஸ் புக்கிங் செய்து கொள்வது நலம். எந்த முன் முயற்சியும் இல்லாமல் நேராக சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும். வனத்திற்குள் விடவே மாட்டார்கள். ரிசர்வேசன் செய்து விட்டு சென்றால் மதியம் அங்கே செல்வது போன்று திட்டமிட்டு சென்றால் இரவு காட்டில் தங்குவது போன்றதோர் அருமையான அனுபவம் நமக்கு கிடைக்கும்.

மறுநாள் காலை டூர் அழைத்து செல்வார்கள். அடர்ந்த வனத்திற்குள்  மரங்கள் வன விலங்குகள் என்று கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. நல்ல கேமரா வைத்துகொள்ள வேண்டும். காண கிடைக்காத காட்சிகளை படம் எடுத்து வாழ்நாள் பொக்கிசமாக வைத்து பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

திரும்பி வரும் போது ஒரு அரைநாள் டாப்ஸ்லிப்பில் செலவிட்டால் போதுமானதாக இருக்கும். இங்கும் வனபகுதிக்குள்  சுற்றுலா அழைத்து செல்கிறார்கள். யானை சவாரி முன் பதிவு செய்து சென்றால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். மாலை வேளைகளில் கும்கி யானைகளுக்கு உணவு ஊட்டுவது பார்க்க கண்கொள்ளா காட்சி.

டாப்ஸ்லிப்பில் யானைகள் முகாம் 


யானை சவாரிக்கு செல்லும் கும்கி 
வனத்தில் சுதந்திரமாக சுற்றி திரியும் மயில் 

அமைதி பள்ளத்தாக்கு (Sailent Valley)






கோவையில் இருந்து 90 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கிறது இந்த அமைதி பள்ளத்தாக்கு. கோவை தடாகம் சாலை வழியாக ஆனைகட்டியை தாண்டி செல்ல வேண்டும். கேரளா மாநிலத்துக்கு சொந்தமான வனம். இங்கேயும் முன் பதிவு இருக்கிறது. சைலன்ட் வாலி என்று நெட்டில் தேடினால் தொடர்பு எண் கிடைக்கிறது. காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கிறார்கள். வனத்துக்குள் செல்ல தனியார் ஜீப்புகளை வாடகைக்கு எடுத்து கொள்ள வேண்டும். ஆறு பேர் பயணிக்க கூடிய ஒரு ஜீப் 1600 ரூபாய்க்கு கிடைக்கிறது. உள்ளே சென்றால் அருமையான வனம். ஒரு அழகிய ஆறு ஒன்று ஓடுகிறது, வனத்தை கண்காணிக்க ஒரு பெரிய வாட்ச் டவர் அமைத்துள்ளனர். ஆற்றில் குளிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் நிறைய அட்டைகள் இங்கே இருக்கிறது. அவை கடிப்பது நமக்கு வலிப்பதே இல்லை. கையில் புகையிலை அல்லது மூக்கு பொடி வைத்து கொள்ள வேண்டும். அட்டை கடிக்கும் போது அதன் மீது தூவினால் விட்டு விடும். ரத்தம் வெளியேறுவதை தடுக்க பேண்ட் எய்ட் வைத்து கொள்வது அவசியம்.

கொடிவேரி அணை மாற்றும் நீர்வீழ்ச்சி 

அணையின் பனோரமிக் வியு 

கோவையில் இருந்து சத்திய மங்கலம் அருகில் இந்த நீர்வீழ்ச்சி இருக்கிறது. கோவையில் இருந்து 75 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் இருந்து வருபவர்கள் ஈரோட்டில் இருந்து 63 கிலோ மீட்டர் தூரமே இருக்கிறது. கோவை வந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

அருவியில் நீர் விழும் அழகிய காட்சி 
காலை நேரத்தில் சென்று விட்டால் அருவியில் குளித்து விட்டு அணையில் இருந்து பிடித்த மீன் பிடித்து அருமையாக சமைத்து  தருகிறார்கள். மதிய உணவு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கிராமத்து சமையல் மீன் குழம்பு மீன் வறுவல் என்று சாப்பிட கலக்கலாக இருக்கும். பிடித்தவுடன் சமைத்து தருவதால் மீன் சுவை நீண்ட நாட்களுக்கு மனதில் நிறைவாக இருக்கும். 
பரிசலில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் காட்சி 

பரிசல் பயணம் செல்ல மிக குறைந்த கட்டணமே வசூலிக்கின்றனர். பரிசலில் பயணம் செய்ய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது மட்டுமே ஒரு குறைபாடு. 

அருவியின் அருகில் இருக்கும் பூங்காவில் இளைப்பாற அருமையான இடம் இருக்கிறது. ஒருநாள் சுற்றுலாவிற்கு அருமையான இடம். 

நான் மேலே சொன்ன இடங்கள் இயற்கை ஆர்வலர்களுக்கான இடங்கள். இது போக ஆன்மீகத்தில் திளைப்பவர்களுக்கும்  கொங்கு மண்டலத்தில் ஏராளமான கோவில்கள், மதம்  சார்ந்த யோகா மையங்கள், காருண்யா பல்கலை கழகத்தில் இருக்கும் பெதேஸ்தா மற்றும் இஸ்லாமிய மசூதிகளும் வழிபாட்டு தளங்களும் இங்கே ஏராளம். 

Saturday, 18 July 2015

வெள்ளிங்கிரி பயண கட்டுரை


வெள்ளிங்கிரி மலைச்சாரலில்


வாழ்வில் முதல் முதலாக முகநூலில் அறிமுகமான நண்பர் ஒருவரை நேரில் சந்திக்க போகிறோம் என்ற ஆவல் முதல் முதலாக வெள்ளிங்கிரி மலை ஏற இருக்கிறோம் என்பதை விட அதிகமாக இருந்தது. முகநூல் நண்பர் பத்மஸ்ரீ விஜயகுமார் திடீரென்று இன்பாக்ஸில் வெள்ளிங்கிரி ட்ரெக்கிங் செல்கிறேன் வருகிறீர்களா என்று கேட்டவுடன் இன்ப அதிர்ச்சி. உடனே வருகிறேன் என்று டைப் அடிக்க உங்கள் போன் நம்பர் கொடுங்கள் அண்ணா என்று கேட்டார். மறுநிமிடம் இனிமையான கொங்கு தமிழில் “அண்ணா நமஸ்காரம் எப்படி இருக்கீங்க” என்று அன்பான விசாரிப்பு. என்னையும்“Vellingiri 15th July wed” என்ற வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்து விட்டார். அதன் பிறகு நடந்தது எல்லாமே ஒரு வரலாறு. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பின் அந்த ஜூலை 16ம் வந்து விட்டது.

ஒரு வாட்சப்பை வைத்து எவ்வளவு பெரிய ட்ரெக்கிங்கை ஒருங்கிணைக்க முடியும் என்று எனக்கு காட்டிய முதல் அனுபவம். ஒவ்வொருவரும் எங்கே இருக்கின்றனர் என்பதை நிமிட கணக்கில் அப்டேட் செய்து அசத்தினர். இன்றைய ட்ரெக்கிங்கிற்கு தேர்வானவர்களில் பெரும்பாலானவர்கள் முகநூல் நண்பர்கள் முதல் முறையாக சந்தித்து கொண்டவர்கள். வந்தவர்கள் அத்துணை பேரும் வேறு வேறு துறையில் ஜாம்பவான்கள். ட்ரெக்கிங் தொடங்கும் முன் எங்கள் எல்லோரையும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம்.

பத்மஸ்ரீ விஜயகுமார் 

நெல்லையில் இருந்து வந்த நண்பர் ராஜீவ் மலை ஏறுவதில் என்ன பிரச்சனைகள் வந்தாலும் எப்படி சமாளிப்பது என்பதில் இருந்து திரும்பி வருவது வரை செய்ய வேண்டியவற்றை பற்றி விளக்கினார். எல்லோருக்கும் காலை உணவு மதியம் உணவு கோவை டாட்டாபாத்திலிருந்து வந்திருந்த நண்பர் குமரேசன் பொட்டலங்களாக கொடுக்க காலை 7.00 மணிக்கு மலை ஏற தொடங்கிவிட்டோம். என்னவெல்லாம் எடுத்து வரவேண்டும் எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்பது முதல் ஏற்கனவே வாட்சப்பில் அறிவுருத்த- பட்டிருந்ததால் எங்கள் குழு எவரெஸ்ட் மலையேறும் குழுவை போல் தனித் தன்மையுடன் திகழ்ந்தது. .



வெள்ளிங்கிரி மலை இந்துக்களால் தென் கயிலாயம் என்று போற்றபடுகிறது. எங்கள் குழுவில் இருந்த ஒரு சிலர் தவிர மற்றவர்கள் இயற்கை ஆர்வலர்களாகத்தான் தெரிந்தார்கள். மத நம்பிக்கை இருப்பவர்களாக இருந்தால் அம்மாவாசை அன்று மலை ஏறமாட்டார்களாம். மற்ற நாட்களில் வனத்துறை மேலே செல்ல அனுமதிப்பதில்லை. வருடத்தில் மூன்று மாதங்கள் சீசன் தவிர மாதம் இரண்டு நாட்கள் அதாவது பவுர்ணமி மற்றும் அமாவாசை அன்று மட்டும் மேலே செல்வதற்கு எந்த அனுமதியும் தேவை இல்லை. பவுர்ணமி அன்று கூட்டம் அதிகம் இருக்கும் என்று அமாவாசை நாளை தேர்ந்தெடுத்திருந்தது எவ்வளவு அருமையான முடிவு என்று மேலே செல்ல செல்ல உறுதியானது. எங்களை தவிர பறவைகள் குரங்குகள் மட்டுமே மேலே இருந்தன.


கருப்புசாமி அண்ணன்  அரவிந்த் அமிர்தராஜ் 
கதிர், ரஞ்சித் 

கொடி ஒன்று மரத்தை
வளைத்திருக்கும் காட்சி 


இரண்டாயிரம் படிகள் ஏறியிருப்போம். இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்துவிட்டது. கால்கள் இதற்கு மேல் வேண்டாம் திரும்பி போய் விடு என்று மூளைக்கு கட்டளை இட்டுகொண்டிருந்தது. ட்ரெக்கிங் ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் நன்கு பரிட்சயமான எக்ஸ்பர்ட்டுகளை முன்னால் ஒருவரும் இடையில் ஒருவரும் கடைசீயில் பேக் அப்புக்கு ஒருவருமாக பிரிந்து அழகாக கூட்டி சென்றனர். எங்களுடன் வந்த பத்மஸ்ரீ விஜயகுமார் இன்னும் ஒரு இரநூறு படிகள் தான் கடினமாக இருக்கும் பிறகு உங்களுக்கு ஈசியா இருக்கும் என்று மோட்டிவேட் செய்து கொண்டே வந்தார். ஆனால் அந்த இரநூறு படிகள் கழித்தும் மறுபடியும் இதைவிட கடினமாக தான் இருக்க போகிறது என்பது போக போகத்தான் புரிய ஆரம்பித்தது.


கைதட்டி சுனை காலை உணவு 
உண்ணும் போது  

ஐந்தாவது மலையில் இருந்து சமவெளி 
பாம்பாட்டி சித்தர் குகை 
பாம்பாட்டி சித்தர் குகையின்
உட்புற காட்சி 


இதற்கு மேலும் கால்கள் நடக்கவே முடியாது என்று சொல்லும்போது முன்னே சென்ற அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து எங்களுக்காக காத்திருந்தது மனதுக்கு இதமாக இருந்தது. அங்கே எல்லோருக்கும் நிலக் கடலை யும் வெல்லமும் திருப்பூரில் இருந்து வந்த செந்தில் பரிமாறினார். மணி 8.00 இருக்கும். இன்னும் அரைமணி நேரத்தில் காலை உணவு எடுத்து கொள்ளலாம் என்று குழு தலைவர் ராஜீவ் சொல்லி வாருங்கள் புறப்படலாம் என்று சொன்னவுடன் பயண குழு அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாரானது.

நீர்வரும் பாதைகளில் ஏறி 
செல்வது  அரவிந்த்  அமிர்தராஜ் 
முதல் மலை முழுவதும் உயர்ந்த மரங்கள் ரம்மியமான பறவைகளின் ஒலி அந்த ஒலிகளுக்கு மூங்கில்கள் உரசும் புல்லாங்குழல் கானம் காற்றின் ஒலி என்று ஒரு மெல்லிசை போட்டியே அங்கே நடந்து கொண்டிருந்தது. கால்கள் மூளைக்கு இட்ட கட்டளையை மூளை நிராகரித்து மீண்டும் நடக்க மூளை கால்களுக்கு உத்தரவிட்டது. நிலக்கடலையும் வெல்லமும் கொடுத்த உற்சாகமும் சேர்ந்து கொள்ள மீண்டும் பயணம் முதலில் இருந்தே ஆரம்பிப்பது போன்ற ஒரு உணர்வு.

மலை ஏறும் போது மேலே செல்ல செல்ல நமக்கு சுவாச காற்று குறைவாகத்தான் கிடைக்கும். பிராணவாயுவின் அடர்த்தி குறைவாக இருக்கும். முடிந்த வரை மலை உச்சியில் தங்குவதை தவிர்ப்பது நல்லது. இரவு நேரங்களில் அங்கே இருக்கும் மரங்களும் பிராண வாயுவை சுவாசித்து கரியமில வாயுவை வெளியே விடுவதால் சுவாசிப்பது சிரமாமாக இருக்கும். என்ன ஆனாலும் மாலைக்குள் அடிவாரம் வந்துவிட வேண்டும் என்ற வேகம் எங்கள் குழுவில் எல்லோரிடமும் காண முடிந்தது.

இரண்டாவது மலையில் புதிதாக வந்திருந்தவர்களை அழைத்து செல்லும் பொருப்பு விஜயகுமரிடமிருந்து குமரேசன் வசம் மாறியது. சென்னையில் இருந்து வந்திருந்த அமிரதராஜ் மற்றும் திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த மணிகண்டன் இருவரும் இரண்டு புறமும் தோளோடு தோள் சேர்ந்து மெதுவாக அடுத்த மலையை அளக்க ஆரம்பித்தோம். நாங்கள் தான் கடைகுட்டிகள்.

எங்களுடைய குழு தலைவர் ராஜீவ்  நெல்லையிலிருந்து 

செந்தில்ராஜ்  திரவியம் (இந்த கட்டுரையாளர்)
இப்போது மெல்லிசையாக இருந்த காற்று ஜாஸ் மியூசிக் வாசிக்க ஆரம்பித்திருந்தது. மூங்கில்கள் மத்தளம் கொட்டியது. வானத்தில் இருந்து பேரிரைச்சல் ஓ வென காற்று மரங்களின் ஊடே ஊடுருவும் சத்தம் வேகமாக மழை அடிக்க போகிறதோ என்ற சந்தேகத்தை கொடுத்தது. மரங்களின் ஊடே அங்கொன்றும் இங்கொன்றும் கருமையாக இருந்த பெரிய பாறைகள் யானை ஒன்று அங்கே நிற்கிறதோ என்ற திகிலை கொடுத்தது. உற்று பார்த்தபின் தான் அவை பாறைகள் என்று ஊர்ஜிதம் செய்ய முடிந்தது. சூரியன் எங்கே இருக்கிறது என்பதை யூகிக்க கூட முடியவில்லை.
நீங்கள் செல்லும் பாதையில் யானை குறுக்கிட்டால் பள்ளத்தை நோக்கி ஓடுங்கள் என்று எங்கள் குழு தலைவர் நண்பர் ராஜீவ் அறிவுறுத்தி இருந்தார். பள்ளத்தை நோக்கி துரத்த அவைகளுக்கு விருப்பம் இருக்காதாம்.
முதல் மலையில் ஏறும்போது இருந்த மூச்சிறைப்பு நின்று சுவாசம் சீராக போய் கொண்டிருந்தது ஓரளவு நிம்மதியை தந்தது. அரை மணி நேரத்தில் காலை உணவு உட்கொள்ள கைதட்டி சுனை என்ற இடத்தை நெருங்கினோம். இயற்கையான ஒரு நீரூற்று. பூமியின் ஆழத்தில் இருக்கும் நீரோட்டத்தை மலை அழுத்தும் போது கேப்பிலேரி போர்ஸ் காரணமாக மலை இடுக்குகள் வழியாக பொத்து கொண்டு நீர் மேலே வருமாம். அப்படி பொத்து கொண்டு வந்த இடத்தில் யாரோ ஒரு மனிதர் மூங்கிலை இரண்டாக பிளந்து இடையே இருக்கும் தடுப்புகளை சுரண்டி விட்டு அந்த ஊற்றின் கண் மீது சொருகி வைத்திருந்தார். அதனால் மலை பயணம் செல்பவர்கள் தங்களுக்கு வேண்டிய அளவு தண்ணீரை சேகரித்து கொள்ள ஏதுவாக இருந்தது.

அங்கே குரங்குகள் கூத்தாடி கொண்டிருந்தன. கொடி ஒன்று பெரிய மரம் ஒன்றை இழுத்து தள்ளி இருந்தது. அவ்வளவு பெரிய கொடியை நான் பார்த்ததே இல்லை. ஒருவரால் கட்டி பிடிக்க முடியாத அளவு விட்டம். நான்கு பேர் சேர்ந்தாலும் கட்டி பிடிக்க முடியாத அளவுக்கு மிக பெரிய மாமரம் ஒன்றையும் காண முடிந்தது. மந்திகளுக்கு உணவு சப்பளை இங்கிருந்துதான் வருது போல.                           

காலை உணவு அவ்வளவு ருசியாக இருந்தது. சப்பாத்திக்கு தக்காளி தொக்கு. சாப்பிட்டு விட்டு மீண்டும் மலை ஏற வேண்டும். அடுத்த மலையில் சாரல் மழை லேசாக பூ போல் தூவி எங்களை வரவேற்றது. அந்த மழையில் நனைய வேண்டும் என்றே ஆசை. ரெயின் கோட் இருந்தும் யாரும் போடவில்லை. ஒரே ஒரு பாறை ஒரு கால் கிலோ மீட்டர் நீளம் இருக்கும். மேலே செல்வதற்காக படிகட்டுகளாக சீவி விட்டிருந்தார்கள். அப்படி செய்திருக்காவிட்டால் பாறை கயிறுகள் இருந்தால் தான் மேலே செல்ல முடியும்.

            நடக்க நடக்க மணிகண்டனிடம் இருந்து புளிப்பு மிட்டாய் மற்றும் காய்ந்த கருப்பு திராட்சைகள் ஒவ்வொன்றாக கிடைத்து கொண்டே இருந்தது உடலுக்கு வேண்டும் அளவு பலம் சேர்ந்து கொண்டே இருந்தது. சற்று நேரத்தில் சிறிய ஓடை ஒன்று குறுக்கிட்டது. எங்கள் குழுவில் இருந்த எல்லோரும் உடைகளை களைந்து குளிக்க ஆரம்பித்தனர். கிளம்பும் போதே நண்பர் ஒருவர் அங்கே நிறைய அட்டை பூச்சிகள் இருக்கும் என்று எச்சரித்து அனுப்பியதால் குளிக்கும் விபரீதமான முடிவை கை விட்டேன். போதாத குறைக்கு நீரின் வெப்பநிலை ஐந்து டிகிரிக்கும் குறைவாக இருந்தது.

பாறைகளின் ஊடே நடை பயணம் 
வித்தியாசமான மண் அமைப்புகள் 
          சிறுவன் ஒருவனும் அவன் உறவினர் ஒருவரும் மேலிருந்து கீழே வந்து கொண்டி ருந்தனர். அந்த சிறுவன் காலில் ரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது. அவன் காலில் கடித்த அட்டை அவனுக்குள் ஹிரிடினை செலுத்தி இருந்தது அது ரத்தம் உறை யாமல் செய்து விடும்.           அட்டை கடித்து சிறிது நேரம் வரை அந்த என்சைமின் பவர் இருக்கும்  வரை ரத்தம் வழிந்து கொண்டேதான் இருக்கும். பிறகு தானாகவே நின்று விடும்.

    அந்த சிறுவன் ரத்தம் வழிவதை பார்த்து அழுது கொண்டிருந்தான். அவனை பார்த்தவுடன் அட்டை கடித்து விட்டதா என்று நான் கேட்க ஆம் என்று மேலும் கீழும் தலையை ஆட்டினான். நீ கொடுத்து வைத்தவன். உனக்கு வாழ்நாள் முழுக்க ரத்தம் கட்டியாகாது. உனக்கு ப்ரெயின் டியூமர் வரவே வராது என்று நான் சொல்லவும் அவனுடன் கூட வந்தவர்களுக்கும் உற்சாகம் பற்றி கொண்டது. டேய் அட்டை கடிப்பது நல்லதாம் டா என்று சொல்லவும் அழுது கொண்டிருந்த அவனுக்கு சிரிப்பு அடங்கவில்லை. உற்சாகத்துடன் கீழே இறங்க ஆரம்பித்தான். நாங்கள் மேலே ஏற ஆரம்பித்து விட்டோம்.

     மேகங்கள் என்னை தொட்டு போவதென்ன அந்த மின்னல்கள் என்னை உரசி போவதென்ன என்று வைர முத்து உண்மையாகவே இப்படி ஒரு சிகரத்தில் நின்று கொண்டு தான் சிந்தித்திருக்க வேண்டும். ஆறாவது மலை ஏறியவுடன் பறவைகள் குரங்குகள் எல்லாம் விடை சொல்லி சென்று விட்டது. சற்று நேரம் அமைதியாக இருந்தது. டிக் டிக் டிக் என்று சுவற்று கோழி என்று சொல்வார்களே அதே போன்று எதோ ஒரு வண்டு சப்தம் எழுப்பி கொண்டிருந்தது.

      பெரிய பெரிய மரங்கள் ஐந்தாவது மலையோடு ஆதிக்கம் செய்வதை நிறுத்தி கொண்டன. அங்கே குறிஞ்சி குறுஞ்செடிகள், லெமன் கிராஸ் (Cymbopogon citratus), மற்றும் மலை நெல்லி மரங்கள் மட்டுமே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வளர்ந்திருந்தன. டிஸ்கவரி சானலில் வரும் பியர் கிரிஸ்சுக்கு சவால் விடும் அளவுக்கு பாதை மாறியிருந்தது. ஒவ்வொரு மலையும் ஒரு விதமான பயோ ஸ்பியர்களாக இருந்தன. மொத்தமாக ஒரே மலைதான். அங்கே காணப்படும் ப்ளோரா பானா அதாவது தாவரங்கள் மற்றும் விலங்குகள் இருப்பதை வைத்து வகை படுத்தி இருக்க வேண்டும். ஒரு மலை களிமண்ணாலும் இன்னொரு மலை செம்மண்ணாலும் வேறு ஒரு மலை சுண்ணாம்பு கற்களாலும் உருவாகி இருந்தது. மலை உச்சியில் இருந்து நல்ல மழை பெய்யும் போது வரும் மழை நீர் உருவாக்கி இருந்த பாதை தான் இப்போது எங்களுக்கு நடை பாதை.

          மேகங்கள் அறுபது முதல் எழுபது கிலோமீட்டர் வேகம் இருக்கும் முகத்தில் வந்து மோதின. நடப்பது கடினமாக இருந்தது. பார்க்கும் திறன் 10 மீட்டாருக்கும் குறைவாக இருந்தது. லேசாக சாரல் அடித்து கொண்டிருந்ததால் பாதை பனிச்சறுக்கு விளையாட்டு மைதனமாகி விட்டுருந்தது. ஒரு இடத்தில் கால் வைத்ததும் சர் என்று வழுக்கி கொண்டே சென்றது. கையில் இருந்த மூங்கில் குச்சி எதோ ஒன்றில் மாட்டி மேலும் வழுக்கி செல்லாதவாறு தாங்கி பிடித்து கொண்டது. நான் போட்டிருந்த ரெயின் கோட்டில் வெள்ளையாக ஐஸ் பரவியிருந்தது. கை வைத்து தடவினால் ஜில் என்று இருந்தது. கைகள் உறையாமல் இருக்க கை தட்டி கொண்டே மேலே எறவாரம்பித்தோம்.

ஏழாவது மலை ஏறும்போது 

ஏழாவது மலை நோக்கி பயணம் 
      
         கடைசி மலை முழவதும் வழுக்கும் பாறைகளும் களிமண் தரையாகவும் நடப்பதற்கு பெரிய சவாலாக இருந்தது. கீழே இறங்கி வந்த ஒரு சிலர் சூவை கழட்டி விட்டு செல்லுங்கள் என்று அறிவுறுத்தினர். ஆனால் ஏற்கனவே குளிரில் கை விறைத்திருந்தது. சூவையும் கழட்டி விட்டால் தாக்கு பிடிப்பது கடினம் என்று நிதானமாக நடந்து சென்றேன். ஒரு இடத்தில் ஒரு பெரிய வழுக்கு பாறை மட்டுமே இருந்தது. எப்படி ஏற வேண்டும் என்று தெரியவில்லை. ராஜீவ் கையால் தடவி பார்த்ததில் மேலே மூன்று விரல்கள் மட்டும் பிடிப்பதற்கு ஒரு மூன்று ஓட்டைகள் இருந்தது. கிளிப் ஹேங்கர் என்ற படத்தில் மலையேறும் ஹீரோ ஒரே ஒரு ஓட்டையில் ஒத்தை விரலில் மலை சரிவில் தொங்கி கொண்டிருப்பார் அதே போல் மூன்று விரல்களை மட்டும் மாட்டி மேலே உடம்பை எக்கி ஏறியது புதிய அனுபவாமாக இருந்தது.

      உடன் வந்த ராஜீவும் குமரேசனும் பொறுமையாக புதியவர்கள் ஏறும் வரை காத்திருந்து பின் மேலே வந்தனர். கடைசியில் ஒருவழியாக சிகரம் தொட்டாச்சு. அங்கே இருந்த இரண்டு பிரமாண்ட பாறைகளின் மேலே ஒரு பாறை கூரை போல் இருந்தது. ஒவ்வொரு பாறையும் ஆயிரம் டன் எடை இருக்க வேண்டும். ஒரு பெரிய பாறை ஒரு நந்தி வானத்தை அண்ணாந்து பார்த்து கொண்டிருப்பது போல் இருந்தது. அங்கே இயற்கையான ஒரு குகையின் உள்ளே இருந்த சுயம்பு லிங்கத்திற்கு மாலைகள் போட்டு பூஜை செய்து வைத்திருந்தனர்.

          ஒரு பத்து நிமிடம் கூட இருக்காது எங்கள் குழு தலைவர் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு இறங்கலாம் என்று சொல்லி விட்டார். எங்களுக்கு முன் சென்றிருந்தவர்கள் நாங்கள் மேலே செல்வதற்குள் கீழே இறங்கி சென்று விட்டனர். பருவ நிலை எப்படி வேண்டுமானாலும் மோசமாக மாறும் என்று அதிக நேரம் அங்கே இருக்கு முயற்சிக்க வில்லை. மதிய உணவுக்கு புளியோதரை அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் மணிகண்டன் நெல்லையில் இருந்து அல்வா வாங்கி வந்திருந்ததை ஆளுக்கு ஒன்றாக கொடுத்தார். அருமையான சுவை.

        மலை மிகவும் செங்குத்தாக இருந்ததால் ஏறுவதற்கு எவ்வளவு உழைப்பை செலவிட வேண்டி இருந்ததோ அதே அளவு உழைப்பு இறங்குவதற்கும் செலவிட வேண்டி இருந்தது. கையில் இருந்த பணம் ஜிம்பாப்வே டாலராக மாறி விட்டது. ஆம் அங்கே பணம் வெறும் பேப்பர் தான். வாங்குவதற்கு ஆள் இருந்தால் தானே அதற்கு மதிப்பு. கீழே இறங்கி வரும் போது இரண்டாவது மலையில் ஒரு ஆதிவாசி இளைஞன் எங்களுக்கு சுக்கு காப்பி போட்டு கொடுத்தார். அந்த நேரம் அதன் சுவைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்பது நிச்சையம். கடைசி மலை வரும் போது இருட்ட ஆரம்பித்து விட்டது. அமாவாசை என்பதால் பார்வை திறன் இல்லாதவர்களாக அனைவரும் தடவி தடவி இறங்க ஆரம்பித்தனர். ஆனால் எங்கள் குழுவினருக்கு ஏற்கனவே கொடுத்த லிஸ்டில் டார்ச் லைட் இருந்ததால் நாங்கள் இறங்குவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.

                       
வெள்ளிங்கிரி மலையில் சிவலிங்கம் இருக்கும் குகை மற்றும் நடை பாதை  
சுயம்புருவாய் இருக்கும் வெள்ளிங்கிரி கைலாசநாதர் 
கடும்குளிரில் சிகரத்தின் உச்சியில் நான் 
           ஒரு ஆயிரம் படிகள் இறங்கியதும் குமரேசனையும் செந்திலையும் காணவில்லை. சரி வரட்டும் என்று காத்திருந்தோம். இரவில் வெளிச்சம் இல்லாமல் தரையை தேடிகொண்டிருந்த ஒரு சிலரை அவர்கள் ஆதரவாக அழைத்து வந்தது நெகிழ்வாக இருந்தது. சபரி மலை பல முறை பெருவழியில் நடந்த அனுபவம் இருந்தாலும் இந்த மலை ஏறி இறங்குவது ஒரு மிக பெரும் சவாலாக எனக்கு இருந்தது. கடைசி படிக்கட்டை பார்த்தவுடன் உற்சாகம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. இனி இப்படி ஒரு பயணம் எப்படி கூப்பிட்டாலும் போவதில்லை என்று முடிவு அப்போது செய்து விட்டேன். உடல் முழுவதும் குத்து சண்டை போட்டது போல் வலி.


          ஒருவழியாக காரில் ஏறி நண்பர்களை அவர்கள் ஊருக்கு செல்ல அனுப்பி வைத்து விட்டு வீட்டிற்கு வந்து தூங்க ஆரம்பித்தவன் தான். அடுத்தநாள் பத்மஸ்ரீ விஜயகுமார் மொபைலில் கூப்பிட்ட போது தான் கண் விழித்தேன். அண்ணா கால் வலி எப்படி இருக்கு என்று அன்பான விசாரிப்பு. அடுத்த நிமிடமே வலி எல்லாம் மறந்து போனது. மனம் இன்னுமோர் பயணம் எப்போது என்று ஏங்க ஆரம்பித்து விட்டது.

மேகங்கள் என்னை சுற்றி போவதென்ன
அந்த மின்னல்கள் என்னை உரசி போவதேன்ன்ன்ன.....

மீண்டும் ஒரு பயணத்தில் சந்திக்கிறேன்.